enathu paarvai

Meyyappan valai pathivukal.

Wednesday, November 15, 2006

வருடத்தில் ஒருமுறை...

இப்படியாக ஓரிரு வருடங்கள் கழிந்தது.. மீண்டும் மெதுவாக இங்கு எட்டிப் பார்க்கும் எனது ஊக்கம் இன்னும் சில நிமிடங்களில், நாட்களில், மாதங்களில் தொலைந்து போகலாம். அதுவரையில் ஏதாவது எழுத முடியுமானால் நல்லது தான்.

இந்த இரண்டு வருடத்தில் நிறைய நடந்திருக்கிறது. சில நிகழ்வுகள் முக்கியமானவை, பல இயந்திர நியதிக்குட்பட்டவை. வழக்கமான வேலை, வீடு, நரை , திரையைத் தவிர்த்தால் வாழ்வின் மகிழ்வான பக்கங்களை குழந்தைகள் எழுதுகின்றனர். கதிரும், சுடரும் தங்களது புன்னகைகளாலும், குறும்புகளாலும் எங்களின் நாட்களை நிறைக்கின்றனர். அமைதியாய் தோளில் தவழ்ந்த கதிர், எல்லா இரண்டு வயதுப் பையன்களையும் போல விளையாட்டுப் பொருட்களும், மழலைப்பேச்சுமாய் ஓடி விளையாடுகிறான். இப்பொழுது , அமைதியாய் தோளில் தவழ்கிறான் சுடர்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, February 18, 2005

சலாமத் ததாங் - சலாமத் ஜலான்

ஐந்து வாரங்கள் பயணம் முடிந்து ஒருவழியாக மீண்டும் பழைய நிலைக்கு வந்தாகிவிட்டது. வழக்கமாக ஊர் செல்லுகையில் அங்கிங்கு ஊர் சுற்றல், புகைப்படம் எடுத்தல், நண்பர்களுடனான வெட்டிப்பேச்சு என்று போகும். இந்த முறை தோளில் சுமந்து சென்ற குதூகலப் பொதியினை ஊருக்குக் கூட்டிக்கொண்டு காட்டி வருவது தான் முக்கியமானதாக இருந்தது. பெரும்பாலும் குடும்பம், ஊர், உற்றார், உறவினர் குறித்த தனிப்பட்ட அளவினதான மகிழ்ச்சி. மற்றபடிக்கு முன்னர் சொன்னது போல குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக அவ்வளவாக இல்லை. தமிழகத்திற்கு செல்லும் வழியில் மலேசியாவில் ஒரு வாரம் சுற்றினோம். அது பற்றிய நினைவிலிருக்கும் சிறு குறிப்புகள் மட்டும்.

மலேசியா குறித்த உருவகம் சிறுவயதுச் சூழலினால் ஓரளவு உருவாகியிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்காசிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு இல்லாத செட்டிநாட்டுக் கிராமம் இருக்கமுடியாது. வீட்டிலிருந்த வயதானவர்களின் மூலம் கிடைத்த பார்வையும், அது குறித்த விமர்சனப் பார்வையும்,பின்னர் 'புயலிலே ஒரு தோணி' படித்து வந்த பார்வையும், மலேசியாவைக் குறித்த ஒரு எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்தது. தமிழர் 11% சதவீதம் வசிக்கும் நாடு என்பதும் எனது எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். தென்கிழக்காசியாவிலேயே மக்கள் தொகை ஒரு பிரச்சனையாக இல்லாத நாடு மலேசியா. இயற்கை வளங்களும் அதிகம். அதனால் சராசரி மக்களின் வாழ்க்கை முறை ஓரளவு வசதியானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நகரம் நோக்கிய நகர்வின் காரணமாக பெருநகரங்களில் மக்கள் பெருக்கமும், நெரிசலும், மாசும் இருக்கத்தான் செய்கிறது. கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் மலேசியா கட்டுமானத்துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அறிந்து கொண்டேன். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களைப் போலல்லாது பெரும்பாலான மலேசியத் தமிழர்கள் உடலுழைப்பு வேலைசெய்கிறார்கள். துப்புறவுத் தொழிலாளர்கள், மூட்டை சுமப்பவர்கள், கட்டிடக் கூலிவேலை செய்பவர்கள், விவசாயிகள் என்று நிறைய பார்க்கக் கிடைக்கிறார்கள். கல்வியைத் தொடர்வதிலும் பலசிக்கல்களைச் சந்திக்கிறார்கள். (இப்படியாக மானுடவியல் ஆராய்ச்சிப் பயணம் போன்ற ஒரு போக்குக் காட்டுகிறேன் என்றாலும், மலேசிய விமானத்தில் பயணச் செலவு குறைவு என்பதனையறிந்து, அப்படியே நாட்டையும் சுத்திப் பார்க்கலாம் என்ற நோக்கில் தான் சென்றேன் என்பது எல்லோருக்கும் தெரியும் தானே ;-) ).

எங்களது பயணம் பெரும்பாலும் பினாங்கு, அலோர் ஸ்டார், கோலாலம்பூரில் உள்ள வழக்கமான சுற்றுலாத் தளங்களை ஒட்டியே இருந்தது. பார்த்துப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோ ம். நாட்டின் உட்பகுதிகளைச் சென்று பார்க்க விருப்பமிருந்தாலும், நாங்கள் பெரும்பாலும் நகரத்தை விட்டகலா சுற்றுலாப் பாதைகளிலேயே சென்றோம். வழியில் நிறைய சிறு ஆச்சரியங்கள். கோலாலம்பூரின் உயரக் கோபுரமான கேஎல் டவரில் 'ஒலி வழிகாட்டி' வாடகைக்கு எடுத்துக்கொண்டோ ம். காதுக்குள் வைத்துக்கொண்டதும் இனிய தமிழில் மலேசியாவை பற்றிய விவரணை. தமிழ்நாட்டு இந்திய விமானத்திலே கூட தமிழைக் கேட்காத காதுகளுக்கு இதைக் கேட்டது ஆச்சரியம் வரத்தானே செய்யும். அதேபோல வானொலி பண்பலைத் தமிழும் கேட்பதற்கு வித்தியாசமானதாகவும், கொஞ்சம் உற்சாகமானதாகவும் இருந்தது. பின்னர் தான் சென்னையில் சூரியன், மிர்ச்சி இவற்றைக் கேட்டேன். ஆனால் மலேசியா வானொலியில் ஓரளவிற்கு சினிமாவைத் தவிர்த்த மற்ற நிகழ்ச்சிகளும் இருந்த மாதிரித் தோன்றியது. (ஒரு நிகழ்ச்சியின் தலைப்பு "ஆமாவா.. அப்படியா.. ஆஹாஆஆஆஆ". இதை அந்தப் பெண் உச்சரித்த முறை எங்கள் பையனுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது போல. ஓவ்வொருமுறை கேட்கையிலும் சிரிச்சுக்கிட்டே இருந்தான்).

ரோட்டோ ரத்தில் நிறைய இளநி கிடைத்தது. நகரத்தைத் தள்ளி இருந்த இடங்களில் நுங்கும் கிடைத்தது. கோலாலம்பூரில் மாலை புகழ்பெற்ற 'பெடாலிங் தெருவிற்கு"ச் சென்றோம். gucci கடிகாரங்களில் ஆரம்பித்து, இன்னும் வெளிவராத ஹாலிவுட் திரைப்படங்களின் டிவிடி, போலோ, ரீபொக் ஆடைகளென்று "சைனா டவுன்" முழுவதும் மலிவு விலையில் பொருட்கள். ஹாங்காங், தாய்லாந்திலிருந்து கொண்டுவந்து இங்கு விற்கிறார்கள். ஒரு சீனக் கடைக்காரர், எங்களைப் பார்த்து " வாங்க.. வாங்க.. பாப்பா தம்பியா.. தங்கையா " என்றளித்த வரவேற்பில், அவருடைய கடையில் சிரித்துக்கொண்டே சில பொருட்களை வாங்கினோம்.

பினாங்கில் கேக் லோக் சீ புத்தக்கோயிலின் ஆமைக்கூட்டம், பாம்புக் கோயிலில் ஒய்யாரமாகத் தூங்கும் பாம்புகள், சீன ரோட்டோ ர உணவுக் கடைகளில் கிடைக்கும் வகைவகையான பண்டங்கள், கோயிலின் வெளியில் விற்கும் சீனக் கைவினைப் பொருட்கள் இப்படியாக பெரும்பாலும் சீனத் தன்மையுடன் தான் இருந்தது. மற்றபடிக்கு அதிகம் கவர்ந்தது மலாய் உணவு.

உணவை ரசிக்கும் எவருக்கும் தென்கிழக்காசியா ஒரு அட்சயபாத்திரம் தான். மலாய் உணவகங்களின் உணவுப் பட்டியலே ஒரு நீண்ட கவிதைக்கு நிகராணது தான் ;-). ஒவ்வொரு வரியும் படிக்கையிலே பல்வேறு உணர்வு நிலைகளுக்கு இட்டுச் செல்லுகிறது. சீன, மலாய், தாய் , தமிழக, இஸ்லாமிய சமையல் முறைகள் ஒருமிக்கையில் உருவாகும் பல்வேறு சாத்தியங்கள். தவிர பருவநிலை காரணமாக விளையும் வகைவகையான் காய்கறிகள், கீரை வகைகள், சூழ்ந்த கடலில் கிடைக்கும் வகைவவையான மீன்கள், மா,பலா,வாழை,கொய்யா தவிர லொங்கான், ரம்பூதான், மங்குஸ்தான், பைனாப்பிள் என்று சமையலுக்குத் தேவையான பொருட்களின் மிகுதியும் காரணமாக இருக்கலாம். டுரியன் பழத்தைப் பற்றி நிறைய இடத்தில் படித்திருப்பீர்கள்.

Roti jalanகடைகளில் வீச்சுப் பரோட்டா, முட்டைப் பரோட்டா ஆகியவை கிடைக்கும், அமெரிக்க மலாய் உணவகங்களிலும் பெரும்பாலும் இவை கிடைக்கிறது. ஆனால் நான் பார்த்து அதிசயப்பட்டது "ரோட்டி ஜாலா" (தமிழில் சொன்னால் வலைத்தோசை !). துளையிட்ட கரண்டியின் மூலம் இந்தத் தோசை ஊற்றுவதைப் பார்ப்பதே ஒரு நல்ல அனுபவந்தான். ஏறக்குறைய தென்னைமரத்தில் கிளையை மரத்துடன் பிணைக்கும் சல்லடையைப் போன்ற தோற்றம். காரமான கோழிக்குழம்புடன் பரிமாறுகிறார்கள்.

கோய் தியாவும் எனக்கு மிகவும் பிடித்தது. சீனர்களின் மலாய் ரோட்டுக்கடைகளில் நாசிலாமா (உள்ளடக்கம்: தேங்காய் சாதம், வரமிளகாய்த் துவையல், சிறுமீன் பொறியல்) பொட்டலங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இரண்டு பொட்டலங்களையும் ஒரு கப் மலாய் கோப்பியும் குடிப்பதாக நினைத்தாலே ஒரு திருப்தியான புன்னகை தோன்றுகிறது. இன்னும் சீனர்கள் நடத்து ஹாக்கர் கடைகளின் உணவைப் பற்றி நிறைய எழுதலாம். இன்னொரு முறை எழுதவேண்டும்.

படங்கள் இணையத்திலிருந்து உருவியது.
சலாமத் ததாங் - சலாமத் ஜலான் : வணக்கம் - டாடா (மலாய்)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, February 17, 2005

விடுமுறை களித்து...

ஊருக்குப் போயிட்டு வந்தாச்சு. திரும்பி வந்து பாத்தா ஏதோ வேற எடத்துக்கு வந்த மாதிரி இருக்கு.

வலைப்பதிவுகளின் உருவம் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும் மாற்றம் தெரிகிறது. காத்திரமான பல புதிய பதிவுகள் படிக்கக் கிடைக்கிறது. தொடர்ந்து நடக்கும் உரையாடல்கள் ஏதாவது ஒரு வகையில் நமது சிந்தனையைப் பாதிக்கும் என்ற வகையில் எல்லாவகையான எழுத்துக்களுக்கும் இடமுண்டு என்றே தோன்றுகிறது. தமிழ்மணத்தில் புதிதாக இடம்பெற்றிருக்கும் சேவைகள், தமிழ்மணத்தை அடிக்கடி பார்க்க வைக்கிறது. வலையைச் சுற்றுவதை இவ்வளவு எளிதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் ஆக்கிய காசிக்கும், இதற்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

இங்கிருந்த ஹேலோஸ்கான் இலவசசேவை பின்னூட்டங்கள் காணாமல் போய்விட்டது. ஊருக்குச் சென்று திரும்பியதைப் பற்றி எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்றும், கொஞ்சம் இருக்கிறது என்றும் ஒரே சமயத்தில் தோன்றுகிறது. சீக்கிரமாக எழுதாவிட்டால் அந்தக் கொஞ்சமும் இல்லையென்றாகிவிடும்..
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, October 11, 2004

குழந்தையோடு வளர்தல்

பல நாட்களாக இந்தப்பக்கம் வரவில்லை. இணையத்தில் வருவதைத் தவிர ஒன்றும் புதிதாகப் படிக்கவில்லை. விரும்பிய படங்கள் என்று எதையும் பார்க்கவில்லை. நினைத்த முக்கிய காரியங்கள் பலவற்றை முடிக்கவில்லை. ஆனால் வாழ்க்கை மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கல்லரளி மரத்தின் அழகிய பூவொன்று காற்றடிக்காத ஒரு பொழுதில் கிளையிலிருந்து உதிர்ந்து மெதுவாகச் சுற்றிச் சுற்றி காற்றில் அலைந்து இறங்குவது போல சிறு உதட்டிலிருந்து எழும் ங்குஊ, ங்குஊ என்ற மெல்லிய ஓசையோ, ஒரு சின்னப் புன்னைகையோ, தலையைத் தூக்கி மேலே சுற்றுமுற்றும் பார்த்து களைப்பாகிப் போன ஒரு கணத்தில் தொப்பென்று தோளில் சாய்ந்து கொள்ளும் அந்த சின்னஞ்சிறு உடலின் கதகதப்போ வீட்டின் சூழலையே எவ்வளவு இனிமையாக மாற்றி விடுகிறது! நாளும் நேரமும் போதவில்லை. அந்தச் சிறு கண்களின் சுரக்கும் அன்பும், ஆர்வமும் பருகித் திளைக்க இந்த நாட்கள் போதவேயில்லை!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 12, 2004

அறங்கூவி விற்றல்

நல்லான் மேலான் நானிலத்தில்
வல்லான் இல்லானிடர் துடைப்பானெனத்
திக்கெலாஞ் சொல்லித் தன்துதிபாடிக்கூடிப்
பின்னொருநாள் புறங்காலால் மிதித்துச்
சிதைத்தபின் சிரிப்புடனே
நறுக்கிய முலைகளின்
நடுநிலைமைக் கணக்கை
நல்லோரெலாங் கூடி நிர்ணயம் செய்திடுவர்.
அறநிதங்கூவி வித்திடுமிவர்
நிறங்கலையுமொரு நிமிடத்தில்
திமிறித் தலைகாட்டும் நாக்கு
குருதிநக்கிய சுவையுரைக்கும்.
குதறிக்கடித்தைக் கதறியடித்ததைக்
களிப்பாய்க் கிசுகிசுக்கும்.

தேசம்காத்திடுமிவர் நேசமனத்தினை
திறம்வியந்து செயல்மறந்து போற்றுதுமே.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, July 30, 2004

கோட்டைமதில் கருத்தியல் பூனை

அருளின் அண்டைஅயலில் பசுமைப்புரட்சி பற்றி எழுதியிருந்தார். படித்தபின் யோசிக்கையில் நெடுங்காலமாக மனதில் இருந்த கருத்தியல் சார்ந்த ஊசலாட்டம் அங்குமிங்குமாய் மீண்டும் ஆடஆரம்பித்தது. பசி தீர்த்த பசுமைப்புரட்சியை, வெண்மைப்புரட்சியை ஒரு தளத்தில் அப்படியே ஏற்றுக்கொள்ளுகையில் இன்னொரு தளத்தில் அதன் பின்விளைவுகளாக சூழலியலாளர்கள் குறிப்பிடுவனவற்றைப் படிக்கையில் பசுமைப்புரட்சி பற்றிய கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.

பசுமைப்புரட்சி என்றில்லை, பல்வேறு விஷயங்கள் பற்றி முற்றுமுடிவான கருத்து எடுக்க முடியாததாக இருக்கிறது. அணுசக்தி, நீர்பாசனத்திற்கான பெரிய அனைக்கட்டுகள், நதிநீர் இணைப்பு, மரபணுத் தொழில்நுட்பம், தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற நவீன கருத்தாக்கங்கள் முதல் புராதன மத,கலைச் சின்னங்கள் வரை இந்த ஊடாட்டம் இருந்து வருகிறது. ஒருநிலையில் அனுசக்தி, புதிய அணுஉலைக்கான எதிர்ப்பை என்னால் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. ஆனால், அதே சமயம் எரிபொருளுக்கான தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக்க, இன்னும் எக்கச்சக்கமான கிராம நகரங்கள் அறிவிக்கப்பட்ட,படாத மின்வெட்டுக்களில் ஆழ்ந்துகொண்டிருக்கையில் புதிய அணு உலைக்கான தேவையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

பெரிய அனைகளுக்கான எதிராக முன்வைக்கும் காரணங்கள் பல மிகவும் முக்கியமானவை. இன்றைய உஸ்பெகிஸ்தான், அன்றைய சோவியத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அமு தார்ய, சிர் தார்ய நதி திருப்பல் திட்டம் இன்றைக்கு ஏரல் கடலையே அழித்து, அந்தப் பிரதேசத்தையே ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருப்பதைப் பற்றிப் படிக்கிறோம். நிலம்சூழ் கடலில் கலந்துகொண்டிருந்த நதியின் போக்கைத் திருப்பி லட்சக்கணக்கான ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்ய்ப்பட்டது. இதனால், நதிநீர் வரத்துக் குறைந்து கடலில் உப்புத்தன்மை அதிகமாகி, கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து, கடலின் பரப்பளவு மூன்றில் ஒன்றாகச் சுருங்கி, சுகாதாரக் கேட்டிற்கு வித்திடுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருந்த இயற்கையின் இயக்கத்தை நாற்பதாண்டுகால மனித இடையூறு அழித்துவிட்டிருக்கிறது. இந்தத் திட்டம் அந்தப் பகுதியின் பருத்தி உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அளித்த பங்கைவிட பலமடங்கு துயரத்தை அழித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரம், சீனாவின் துயரம் என்றழைக்கப்பட்ட, ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்த மஞ்சள் நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளோ, மற்ற அணைகளோ காத்த உயிர்களை எண்ணிப்பார்க்கையில் இந்தச் சமன்பாடு மிகவும் சிக்கலாகிறது.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு நேரடியானது, அறிவின் அடிப்படையில் அனுகக்கூடியது என்ற பெருங்கதையாடலே நவீனத்துவத்தின் அடிப்படை. நவீனத்துவத்தின் போதாமைகளும், குழப்பங்களும் வெளித்தெரிய ஆரம்பிக்கையிலே தான் மையமற்ற பின்நவீனத்துவக் கருத்துக்கள் தோன்றின. அரசுகளின் பெரிய திட்டங்கள் பெரிய தோல்விகளாக மாறினால் விளைவு விபரீதமாகும். ஆனால் மூன்றாம் உலகநாடுகளின் பெரும்பாலான பிரச்சனைகளில் அவர்களுக்குமுன் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒரே வழியில் பயனிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனாலேயே பெரிய திட்டங்களின் பயன்களும், பின்விளைவுகளுக்குமிடையில் குறுகியகால நோக்கில் முடிவுகள் எடுக்கவேண்டியிருக்கிறது.

வந்தன சிவா போன்றோர் பசுமைப்புரட்சிக்கு எதிராக எடுத்துவைக்கும் காரணங்களை நாம் நிராகரித்துவிட முடியாது. அதே சமயம், சூழலியாளர்கள், பெரும்பாலும் மேல்தட்டு மனப்பாண்மையில் நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துக்களை பொழுதுபோக்கிற்கு எடுத்துவைக்கிறார்கள் என்று கூறுவதையும் பார்க்கவேண்டும். பொருளியல் ரீதியான மேற்கண்ட விசயங்களில் இருக்கும் அதே ஊசாலாட்டம் சில சமூகக் கருத்தியல் பிரச்சனைகளிலும் இருக்கிறது. அதுபற்றியும் எழுதவேண்டும்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 26, 2004

தீ

கும்பகோணம் தீவிபத்து நடந்து சில நாட்கள் ஆகிவிட்டது. பலவிதமான கருத்துக்களும் பார்வைகளும் செய்திகளும் படிக்கக் கிடைத்தன. நேரடியாகவும், மறைமுகமாகவும் சூழலின் நிகழ்வுகள் நம்மை பாதிக்கின்றன. மறுத்தலும், கோபமும், இயலாமையும் தொடர்ந்த செயலற்ற தன்மையும் என்னளவில் கொண்ட உணர்ச்சிகள். போட்டிகள் நிறைந்திருக்கும் சூழலில் 'தன்னைப்பேணி'யாக வளர்ந்துவிட்ட நிலையில், தொடர்ந்து நடக்கும் வன்கொடுமைகளையும், பேரிழப்புகளையும், அராஜகங்களையும், கண்டுகொள்ளாமல் சென்றுவிட பழகிவிட்டோம். நம்முடைய செய்கைகள் திரும்பமுடியாத நிலைக்குச் சென்றுவிட்டதாய் பழிபோட்டுவிட்டு, நாளைய வாழ்வைப்பற்றிய நம்பிக்கைகளை குழந்தைகளின் மீதேற்றிய  எங்கள் கவனக்குறைவும், உதாசீனமும் குழந்தைகளையே எரித்துவிட்டது. ஆறுதல்கள், புதிய விதிமுறைகள், தண்டனைகள், கண்டனங்கள், தீர்மானங்கள் என்று எப்படியோ நடந்ததை நினைத்து அடுத்த படிக்குச் செல்கையில்,   ஆவணங்களைக் கொளுத்த இரண்டாவது முறையாய் பற்றை வைத்த தீ, எங்களது மேல்பூச்சையெல்லாம் சடாரென்று விலக்கி அடியில் புரையோடியிருக்கும் எங்களது  சமூகக்கடமை உணர்வை வெளிப்படுத்துகிறது. இப்படித்தான் நாங்கள் ஓவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொள்கிறோம். மூடிமறைப்பது, எரித்து அழிப்பது, கைகாட்டுவது , தட்டிக்கழிப்பது...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.