enathu paarvai

Meyyappan valai pathivukal.

Friday, April 16, 2004

ராதுகா, முன்னேற்றம், மிர் : திருவாளர். எம்மின் ஸ்டெப்பிப் ?

ராதுகா, முன்னேற்றம், மிர் : திருவாளர். எம்மின் ஸ்டெப்பிப் பயண அனுபவங்கள்.

ஆப்செட்டில் அச்சான கண்ணுக்கு இதமான எழுத்துரு, தடிமனான அட்டையின் மேல் இருக்கும் பளபளப்பான உறை, பக்கங்களுக்கு நடுவே மின்னும் ஊதா நிறத்தில் பட்டுநூலிலான பக்கக்குறி, மலிவுலும் மலிவான விலை. ஒவ்வொரு புத்தகமாக நினைவில் வந்து போகிறது.

சிறிது நாட்களுக்கு முன் படித்த பிரபுவின் மடலில் யா.பெரல்மனின் "பொழுதுபோக்கு பௌதீக"த்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்துக்கொண்டிருந்ததை எழுத அந்த மடல் தூண்டிவிட்டது. ராதுகா என்ற ஒலியைக் கேட்டதுமே, இவ்வளவு நாள் மறந்திருந்த அந்த மிகப் பரிச்சயமான வாசனை என் புலனை நிறைத்தது. ஒவ்வொரு முறை புத்தகத்தை நுகரும் போதும் அதன் பிரம்மாண்டத்தையும், பரந்து விரிந்த ஸ்டெப்பிப் புல்வெளியையும், சைபீரியப் பனியையும், அமைதியாய் நகரும் தோனையும் வொல்காவையும், கூட்டுப் பண்ணையில் சிந்தப்படும் வேர்வையையும், சமோவார் தேநீரையும் ருஷ்யாவே எனக்காக, நான் சுவாசிப்பதற்காக அனுப்பிவைத்திருப்பதாய் நினைப்பேன்.

ஆரம்பத்தில் நான் படித்தது வீட்டில் கிடந்த "ருஷ்யச் சிறுகதைகள்" என்ற நூலில் இருந்து "மேல்கோட்டு". அதுதான் நான் முதன்முதலில் மீண்டும் மீண்டும் படித்த சிறுகதை. நிகோலய் கோகலின் அந்தச்சிறுகதை எழுப்பிய சோகத்தையும் மிஞ்சிவிடக்கூடியது அதே தொகுப்பின் இருந்த "மூமூ" என்ற இவான் துர்கேனிவின் சிறுகதை. அந்த நூலைப் படிக்கையில் ருஷ்யா, மொழிபெயர்ப்பு, உலகச் சிறுகதை இதெல்லாம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ராணிமுத்து நாவலைப் படிப்பது போல் இன்னொரு புத்தகம். அப்படித்தான் படித்தேன். அதற்கு சிலஆண்டுகளுக்குப் பின் நூலக உறுப்பினராகும் தகுதி வந்ததும் அங்கு காணக் கிடைத்த ருஷ்ய புத்தகங்கள் எனக்களித்த வாசிப்பு அனுபவத்திற்கும், மகிழ்ச்சிக்கும் ஈடு வேறேதும் இல்லை. எவ்வளவு புத்தகங்கள்.

அவற்றை மீண்டும் நினைத்துப் பார்ப்பதே ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. ஞாபகமிருப்பதில் சிலவற்றைப் பற்றிக் குறித்து வைக்க நினைக்கிறேன். ருஷ்ய தமிழ் மொழியாக்க நூலகளைக் குறித்து பரிச்சயமில்லாதவர்களுக்கு பல்லை உடைக்கு பெயர்கள் நிறைந்த ஒரு பட்டியலாக இருக்கும். ஆனால், பரிச்சயமுள்ளவர்களுக்கு நண்பன் எழுதிய மிகப்பழைய கடிதத்தை படிப்பதைப் போன்ற நினைவுகூறலாக இருக்கலாம்.

முதலில் நினைவில் இருப்பவை அவ்வளவாக பிரபலமில்லாத ருஷ்ய எழுத்தாளார்களின் படைப்புகள்.

சிங்கிஸ் ஐத்மாத்தவின் "அன்னை வயல்", "குல்சாரி"ம். ஒரு குதிரையின் பார்வையில் தன்வரலாறாக எழுதப்பட்டிருந்தது. குல்சாரி தன் ஆண்மை பறிக்கப்பட்ட நிகழ்வை விவரிக்கும் வரிகளில் நான் உணர்ந்த பரிதவிப்பு, பயமும் நினைவில் இருக்கிறது.

"வீரம் விளைந்தது" என்றொரு நாவல். எழுதியவரின் பெயர் மறந்துவிட்டது. பல இன்னல்களுக்கிடையே, இயற்கையின் ஒத்துழைப்பில்லாதவொரு இடத்தில் ஒரு கூட்டுப்பண்ணையின் போராட்டத்தையும் வெற்றியையும் வெளிப்படுத்திய நாவல். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வெட்டிய கிணறில் தண்ணீர் வருவதை சித்தரிக்கும் பக்கங்களை நான் சிவகங்கையிலிருந்து மதகுபட்டிக்கு பேருந்தில் சென்ற பொழுது படித்தேன். அதைப் படித்து அகவமைதி சிதறி, நிமிர்கையில், ஒக்கூருக்கு அருகே இருக்கும் மாசாத்தியாரின் நிநநவுத்தூண் கண்ணில் பட்டது. தொலைதூர நிலமான ருஷ்யா, பழங்காலப் புலவரான மாசாத்தியார், மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் நான்.. இடம், காலம் எல்லாம் உருகி ஒன்றாவதாக நான் நினைத்து அந்தக் கணத்தில் அடைந்த உள்ளக் கிளர்ச்சியை மறக்கமுடியாதது.

விளாதிமீர் பகமோலவின் "இவான்" சதுப்புநிலக் காடுகளின் மரங்களுக்கிடையில், இடுப்பளவு நீரில் நாஜிகளின் பார்வையில் படாமல் பதுங்கி பதுங்கி ரஷ்ய ராணுவத்திற்குச் செய்தி எடுத்துச் சென்ற போது அருகில் சீரிப் பாய்ந்த தோட்டாவும், தூக்கமில்லா இரவுகளிலும், பகலிலும் அவனது இமைகளை அழுத்திப் படரும் கனவும் மெலிதாகத் தெரிகிறது.

"அதிகாலையின் அமைதியில்" என்றொரு நாவல். எழுதியவர் பெயர் தெரியவில்லை. இதுவும் போரைப் பற்றியது. ஏழு பேர் அடங்கிய ஒரு சிறு குழு எப்படி ஒரு பெரிய ஜெர்மானிய இராணுப்பிரிவை எதிர்கொள்கிறது என்பதனைப் பற்றியது.

மிக்கயீல் ஷோலகவின் "கன்னி நிலம்" (Virgin soil upturned) அப்பொழுதுதான் நூலகத்திற்கு வந்திருந்தது. பளீரென்ற வெள்ளை நிறத்தாள். பக்கங்களை அப்படியே திருப்பினால் கை அழுக்குத்தெரியுமே என்று, கைகளைக் கழுவித் துடைத்துவிட்டுத்தான் படிக்கவே ஆரம்பித்தேன். இரண்டு தொகுதிகளையும் படித்து முடித்ததும் ஒரு பெரும் வரலாறையே அருகில் இருந்து அறிந்தது போல இருந்தது.

தஸ்தேய்வ்ஸ்கி, தல்ஸ்தோய், செகாவ், துர்கேனிவ், புஷ்கின், கார்க்கி போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்பை அதற்கப்புறம் படித்தேன், அதற்கப்புறம் அ-புனைவு நூல்களையும்.. எந்தப் புத்தகத்திலெல்லாம் ராதுகா, மிர், முன்னேற்றப் பதிப்பகம் என்று பெயர் தெரிகிறதோ அதையெல்லா.. நேருவைப் பற்றிய தடியான புத்தகமொன்று, தலைப்பு நினைவில் இல்லை. அப்படிப் படித்தது தான் யா.பெரல்மனின் "பொழுதுபோக்கு பௌதிகம்". அதைப் பற்றியும், மற்ற நூல்களைப் பற்றியும், மொழியாக்கம் செய்த நா.தர்மராஜன், பூ.சோமசுந்தரம் பற்றியும் அடுத்த முறை எழுத வேண்டும்.

இரண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்கெல்லாம் அற்புதமான பதிப்புகள் கிடைக்கும். நான் முதலில் காசுகொடுத்து புத்தகம் வாங்கி ஆரம்பிக்கையில் வாங்கியது எல்லாம் ருஷ்ய புத்தகங்கள் தான். ராதுகா, மிர் , முன்னேற்றப் பதிப்பகங்களின் புத்தகங்கள் எத்தனை சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு ஒருபுதிய உலகை, வாழ்க்கையை, அனுபங்களை அறிமுகப்படுத்தி இருக்கும். தொலைக்காட்சியில்லா, இணையமில்லா, கேபிளில்லா எனது மாணவப் பருவத்தில் என்னை வரவேற்று பல விநோத விந்தை உலகங்களுக்குக் கைபிடித்து அழைத்துச் சென்று மகிழ்வளித்த அந்த ருஷ்ய பதிப்பகங்களுக்கு எனது நன்றியை எப்படி வெளிப்படுத்த முடியும்.


0 Comments:

Post a Comment

<< Home