Agnostic == அகநாத்திகம் ??
நேற்றைக்கு இராமகியின் அஞ்சல் ஒன்றைப் படித்தேன். agnostic என்ற வார்த்தையின் தோற்றத்தினைப் பற்றியும் , அசீவகத்துடனான ஒற்றுமை பற்றியும், பெருஞ்சித்தரனாரின் ஒரு விளக்கப்பாடலையும் குறித்து எழுதியிருந்தார். மீண்டும் நா.கணேசன் இன்று புலப்புற மறுப்பர் அதைப் படிக்கையில் '98ல் தமிழிணையத்தில் "அகநாத்திகம்" என்ற வார்த்தை உபயோகத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது. அநேகமாக இந்த வார்த்தையை வேலுமுருகனிடமிருந்தோ இரமணியிடமிருந்தோ நான் உபயோகித்தேன் என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து அப்படியே அன்று அனுப்பிய அஞ்சல்... (ரீசைக்கிளி வாழ்க!!)
இணையத்தோரே,
இந்துமத சரட்டில் அடியேன் கருத்து ஈதென்று எடுத்துரைக்க சிக்கலான கருத்தொன்றும் அகப்படாத காரணத்தால் "குண்டலினி கூட்டி வளர்த்து அந்நெருப்பில் மனப்பறவையாம் ஆசைதனை உப்புடன் மிளகாய் சேர்த்து உவப்பாய் வாட்டியே மொந்தைக்கள்
மூன்று ஊத்தி மூலநாடி ஊடுபோய் காலனடி கண்டுவந்த கள்ளுண்ணிச் சித்தர் என்ற வம்படிச்சித்தரின் சில பாடல்களை இங்கே மேற்செலுத்துகை ;-) செய்கிறேன்.
ஆசிரியர் குறிப்பு:
கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சாமிரு தத்தை புசித்திருப்பது எக்காலம்
என்று புலம்பிய பத்திரகிரியார்,பட்டினத்தார் காலத்தில் கஞ்சா,கள் மொத்த வியாபரம் செய்து கொண்டிருந்தவர் என்றும் பிற்காலத்தில் பொழுது போகததால் சித்தராக மாறி பல சாதனைகள் செய்தவர் என்று சிலர் கூறிகின்றனர்.
இன்னும் சிலர் இவர் யவன,கிரேக்க கப்பல்களில் வியாபரத்திற்காக வந்து பின் பணமனைத்தையும் பரத்தையரிடம் விட்டுவிட்டு திரும்பிப் போக பணமில்லாத காரணத்தால் இங்கேயே தங்கி விட்டார் என்றும் கூறுகின்றனர். "இவர் சித்தருமல்ல, புத்தருமல்ல
சரியான எத்தர். வள்ளி திருமண நாடகக் கொட்டகைகளில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தவர்.. ரொம்ப நாள் நாடகப்பாட்டு கேட்டதனால் உணர்ச்சி வசப்பட்டு எடைக்குப் போட்ட பழைய பரீட்சைப் பேப்பர்களில் கிறுக்கியவையே இவர் பாடல்கள்" என்போருமுண்டு. இவர் யாரென்ற கருத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன் ;-).
இந்து என்பது மதமல்ல...
======================
அழகிய காண்டாமிருகம் பருத்ததோர் நீர்யானை
இளகிய இடியாப்பம் பாயா தொன்னையில்
ஒழுகிய பாயாசம் அழுகிய அன்னாசிப்பழம் இதனில் ஒன்றையென்னி
இலகனேசன் இந்துவை மதமல்ல என்றெடுத்துரைத் திருப்பார்.
பாரதத்தில் பிறந்துவிட்டால் பாரதியென்றினி அழைக்கலாம்
சோரமில்லை - பறையனென்று அழைத்ததெல்லாம் பழையனவே;
யாரதனை எதிர்ப்பதுவோ? வாரும் முன்னே.
தேரதனை ஒட்டியும்மை காலிலிடறி விட்டிடுவோம்.
வம்புஏன் நமக்கென்று வாளாவே நானிருந்தேன்
தெம்புகொஞ்சம் வந்ததால் தெளிவாய் நானுரைப்பேன்.
கொம்புகொம்பு என்றதும் கொக்கியை அவிழ்க்கிறீர்
கொம்பென்று ரைத்தது காண்டாமிருகத்தின் கொம்பல்லோ.
நாலுநாலு நாலென்றதும் வேதமென்று உரைக்கிறீர்;
நாலுநாலு நாலென்பது வேதமில்லை மூடர்காள்,
நாலுநாலு நாலென்பது நல்ல காண்டாமிருகத்தின்
காலுநாலு தானென்று கருத்திலே கொள்ளுவீர்.
நட்டகல்லில் இருப்பதையும், வெட்டவெளியில் இருப்பதையும்
எட்டுக்கட்டம் நடுவிலே திட்டம்போட்டு நிற்பதையும்
விட்டம்விரைத்த வாறேநானும் வெகுநாளாய் வினவியும்
கிட்டவில்லை யாதொன்றும் கடுகளவே யாயினும்.
ஆலமுண்ட கண்டனார் அம்பலத்தில் ஆடினால்
சோளமுண்ட சொ.கருப்பனுக்கு(*) இருப்பு ஏதும்கூடுமோ.
காலமுண்ட கருத்துக்களை கல்லறையில் போட்டுவிட்டு
பேரகண்ட பெருவெளியை பெருக்கி சுத்தம் செய்யடா.
இறைவன் இருப்பதும் இல்லாதிருப்பதும் இப்புவிவாழ்வில்
உரைப்பேன்யான்- ஏற்படுத்ததாதே எள்ளளவு மாற்றமும்
இறந்தாலும் இருந்தாலும் ஆயிரம்பொன் கணக்கு
பொருந்தாதோ மதம்கொண்ட யானைக்கு மட்டும்
வதம் செய்வீர் அகநாத்திகத்தின் ஒளிகொண்டே.
- கள்ளுண்ணிச் சித்தர் (அல்லது) வம்படிச் சித்தர்.
* - சொக்கன் மகன் கருப்பன் :-)
ஆக 24 1998, 4:40 மாலை EST
0 Comments:
Post a Comment
<< Home