பிராண்டோவின் தேயும் குரல்
மார்லன் பிராண்டோ இறந்துவிட்டார். மிகவும் பிடித்த 'அபாகலிப்ஸ் நவ்' (Apocalypse Now) திரைப்படத்திலிருந்து கர்னல்.கர்ட்ஸ் (மார்லன் பிராண்டோ ) குரலில் சில வார்த்தைகள்.
Apocalypse Now திரைக்கதை வசனம் எடுத்த இடம்.
சவரக்கத்தியின் கூர்முனையில் நத்தை நகருவதை பார்த்தேன். கூர்முனையில் மெதுவாக ஊர்ந்து, வழுக்கி வழுக்கி நகர்ந்து, பின் உயிர்த்திருப்பது.. அது ஒரு கனவு, கெட்ட கனவு.
...
நான் குழந்தையாய் இருக்கையில் அந்த நதியில் பயணித்திருக்கிறேன். நதியில் ஒரு இடமிருக்கிறது சரியாக நினைவில் இல்ல. அது கொன்றை மரங்கள் நிறைய வளர்க்கும் இடமாக இருக்கவேண்டும். கட்டற்று காடாக வளர்ந்திருந்தது. சொர்க்கமே இந்த கொன்றை மரங்கள் வடிவாக கீழே இறங்கிவிட்டதோ என்று தோன்றும். உண்மையான சுதந்திரத்தைப் பற்றி எப்போதாவது நினைத்திருக்கிறாயா? சுதந்திரம் - மற்றவர்களுடைய பார்வையில் கருத்துக்களிலிருந்து.. உன்னுடைய கருத்துக்களிலிருந்தே சுதந்திரம்?
...
அந்த இளைஞர்களுக்கு மக்களின் மீது குண்டுகளை வீசச் சொல்லித்தருகிறார்கள் . ஆனால் அவர்களின் போர்விமானத்தில் 'fuck' என்று எழுத அனுமதிக்கமாட்டார்கள். ஏனென்றால் அது அருவருப்பானது..
...
நாம் அவர்கள் எல்லோரையும் கொல்ல வேண்டும். கொன்று எரிக்க வேண்டும். ஓவ்வொரு பன்றியையும், ஒவ்வொரு மாட்டையும், ஒவ்வொரு ஊரையும், ஓவ்வொரு படையையும். என்னைக் கொலைகாரன் என்கிறார்கள். கொலைகாரர்களே இன்னொருவனைக் கொலைகாரன் என்று சொல்வதை என்ன செய்வது? அவர்கள் பொய்யர்கள்.. அவர்கள் பொய்யர்கள், நாம் பொய்யர்களிடத்தில் கருணையுடனிருக்கவேண்டும்.
....
நான் திகிலூட்டும் கொடுமைகளை பார்த்திருக்கிறேன், நீயும் கூட. ஆனால் என்னைக் கொலைகாரன் என்று சொல்ல உனக்கு உரிமையில்லை. உனக்கு என்னைக் கொல்ல உரிமையிருக்கிறது, ஆனால் என்னை எடைபோடுவதற்கு அல்ல. வன்கொடுமையைப் பற்றித் தெரியாதவருக்கு வெறும் வார்த்தைகளால் அவற்றை விவரிக்க முடியவே முடியாது. கொடுமை.. கொடுமைக்கு ஒரு முகமிருக்கிறது. அதனை நண்பனாக்கிக் கொள்ளவேண்டும். கொடுமையும், ஒழுக்கமும் உன்னுடைய நண்பர்கள். நண்பர்கள் இல்லையென்றால், அவை உனது முக்கியமான எதிரிகள். எப்பொழுதும் பயப்படவேண்டிய எதிரிகள். நான் இராணுவத்தில் இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.. யுகங்கள் கடந்துவிட்டது போலத் தோன்றுகிறது... அன்று குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கையில், அந்தக் கிழவன் எங்களை நோக்கி பெரும் அழுகையோடு ஓடிவந்தான். அவனுடன் போய் பார்க்கையில் தடுப்பூசி போட்ட எல்லாக் கைகளையும் அவர்கள் வெட்டியிருந்தார்கள். அங்கே ஓரமாக அந்தக் குவியல்.. பிஞ்சுக் கரங்களின் குவியல். நான் அழுதேன்.. ஒரு பாட்டியைப் போல அழுதேன். என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. நான் அதைப்பற்றி நினைக்க வேண்டும். அதை மறக்கவே கூடாது.. கூடவே கூடாது என்று நினைத்துக்கொண்டேன். தீடிரென்று என் பொட்டில் சுட்டது போலிருந்தது. ஒரு வைர புல்லட்டை வைத்து சுட்டது போலிருந்தது...
கர்னல் கர்ட்ஸ் பாடும் டி.எஸ்.எலியட்டின் கவிதை:
நாம் தக்கை மனிதர்கள்
தலைக்குள் வைக்கோல் திணித்த
தக்கை மனிதர்கள்
வறண்ட குரலில்
நமக்குள் கிசுகிசுப்பது
அமைதியாய் அர்த்தமற்றதாய் இருக்கிறது
முடங்கிய படையாய், அசைவில்லாச் சைகையாய்
வண்ணமில்ல நிழலாய், வடிவமில்லாப் பொதியாய்
உலர்ந்த புல்லின்மீது காற்றாய்
உடைந்த கண்ணாடியின் மீது எலியாய்
நிலவறையில் இருக்கிறோம்...
Apocalypse Now திரைக்கதை வசனம் எடுத்த இடம்.
0 Comments:
Post a Comment
<< Home