தீ
கும்பகோணம் தீவிபத்து நடந்து சில நாட்கள் ஆகிவிட்டது. பலவிதமான கருத்துக்களும் பார்வைகளும் செய்திகளும் படிக்கக் கிடைத்தன. நேரடியாகவும், மறைமுகமாகவும் சூழலின் நிகழ்வுகள் நம்மை பாதிக்கின்றன. மறுத்தலும், கோபமும், இயலாமையும் தொடர்ந்த செயலற்ற தன்மையும் என்னளவில் கொண்ட உணர்ச்சிகள். போட்டிகள் நிறைந்திருக்கும் சூழலில் 'தன்னைப்பேணி'யாக வளர்ந்துவிட்ட நிலையில், தொடர்ந்து நடக்கும் வன்கொடுமைகளையும், பேரிழப்புகளையும், அராஜகங்களையும், கண்டுகொள்ளாமல் சென்றுவிட பழகிவிட்டோம். நம்முடைய செய்கைகள் திரும்பமுடியாத நிலைக்குச் சென்றுவிட்டதாய் பழிபோட்டுவிட்டு, நாளைய வாழ்வைப்பற்றிய நம்பிக்கைகளை குழந்தைகளின் மீதேற்றிய எங்கள் கவனக்குறைவும், உதாசீனமும் குழந்தைகளையே எரித்துவிட்டது. ஆறுதல்கள், புதிய விதிமுறைகள், தண்டனைகள், கண்டனங்கள், தீர்மானங்கள் என்று எப்படியோ நடந்ததை நினைத்து அடுத்த படிக்குச் செல்கையில், ஆவணங்களைக் கொளுத்த இரண்டாவது முறையாய் பற்றை வைத்த தீ, எங்களது மேல்பூச்சையெல்லாம் சடாரென்று விலக்கி அடியில் புரையோடியிருக்கும் எங்களது சமூகக்கடமை உணர்வை வெளிப்படுத்துகிறது. இப்படித்தான் நாங்கள் ஓவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொள்கிறோம். மூடிமறைப்பது, எரித்து அழிப்பது, கைகாட்டுவது , தட்டிக்கழிப்பது...
0 Comments:
Post a Comment
<< Home