enathu paarvai

Meyyappan valai pathivukal.

Friday, July 30, 2004

கோட்டைமதில் கருத்தியல் பூனை

அருளின் அண்டைஅயலில் பசுமைப்புரட்சி பற்றி எழுதியிருந்தார். படித்தபின் யோசிக்கையில் நெடுங்காலமாக மனதில் இருந்த கருத்தியல் சார்ந்த ஊசலாட்டம் அங்குமிங்குமாய் மீண்டும் ஆடஆரம்பித்தது. பசி தீர்த்த பசுமைப்புரட்சியை, வெண்மைப்புரட்சியை ஒரு தளத்தில் அப்படியே ஏற்றுக்கொள்ளுகையில் இன்னொரு தளத்தில் அதன் பின்விளைவுகளாக சூழலியலாளர்கள் குறிப்பிடுவனவற்றைப் படிக்கையில் பசுமைப்புரட்சி பற்றிய கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.

பசுமைப்புரட்சி என்றில்லை, பல்வேறு விஷயங்கள் பற்றி முற்றுமுடிவான கருத்து எடுக்க முடியாததாக இருக்கிறது. அணுசக்தி, நீர்பாசனத்திற்கான பெரிய அனைக்கட்டுகள், நதிநீர் இணைப்பு, மரபணுத் தொழில்நுட்பம், தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற நவீன கருத்தாக்கங்கள் முதல் புராதன மத,கலைச் சின்னங்கள் வரை இந்த ஊடாட்டம் இருந்து வருகிறது. ஒருநிலையில் அனுசக்தி, புதிய அணுஉலைக்கான எதிர்ப்பை என்னால் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. ஆனால், அதே சமயம் எரிபொருளுக்கான தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக்க, இன்னும் எக்கச்சக்கமான கிராம நகரங்கள் அறிவிக்கப்பட்ட,படாத மின்வெட்டுக்களில் ஆழ்ந்துகொண்டிருக்கையில் புதிய அணு உலைக்கான தேவையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

பெரிய அனைகளுக்கான எதிராக முன்வைக்கும் காரணங்கள் பல மிகவும் முக்கியமானவை. இன்றைய உஸ்பெகிஸ்தான், அன்றைய சோவியத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அமு தார்ய, சிர் தார்ய நதி திருப்பல் திட்டம் இன்றைக்கு ஏரல் கடலையே அழித்து, அந்தப் பிரதேசத்தையே ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருப்பதைப் பற்றிப் படிக்கிறோம். நிலம்சூழ் கடலில் கலந்துகொண்டிருந்த நதியின் போக்கைத் திருப்பி லட்சக்கணக்கான ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்ய்ப்பட்டது. இதனால், நதிநீர் வரத்துக் குறைந்து கடலில் உப்புத்தன்மை அதிகமாகி, கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து, கடலின் பரப்பளவு மூன்றில் ஒன்றாகச் சுருங்கி, சுகாதாரக் கேட்டிற்கு வித்திடுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருந்த இயற்கையின் இயக்கத்தை நாற்பதாண்டுகால மனித இடையூறு அழித்துவிட்டிருக்கிறது. இந்தத் திட்டம் அந்தப் பகுதியின் பருத்தி உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அளித்த பங்கைவிட பலமடங்கு துயரத்தை அழித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரம், சீனாவின் துயரம் என்றழைக்கப்பட்ட, ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்த மஞ்சள் நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளோ, மற்ற அணைகளோ காத்த உயிர்களை எண்ணிப்பார்க்கையில் இந்தச் சமன்பாடு மிகவும் சிக்கலாகிறது.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு நேரடியானது, அறிவின் அடிப்படையில் அனுகக்கூடியது என்ற பெருங்கதையாடலே நவீனத்துவத்தின் அடிப்படை. நவீனத்துவத்தின் போதாமைகளும், குழப்பங்களும் வெளித்தெரிய ஆரம்பிக்கையிலே தான் மையமற்ற பின்நவீனத்துவக் கருத்துக்கள் தோன்றின. அரசுகளின் பெரிய திட்டங்கள் பெரிய தோல்விகளாக மாறினால் விளைவு விபரீதமாகும். ஆனால் மூன்றாம் உலகநாடுகளின் பெரும்பாலான பிரச்சனைகளில் அவர்களுக்குமுன் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒரே வழியில் பயனிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனாலேயே பெரிய திட்டங்களின் பயன்களும், பின்விளைவுகளுக்குமிடையில் குறுகியகால நோக்கில் முடிவுகள் எடுக்கவேண்டியிருக்கிறது.

வந்தன சிவா போன்றோர் பசுமைப்புரட்சிக்கு எதிராக எடுத்துவைக்கும் காரணங்களை நாம் நிராகரித்துவிட முடியாது. அதே சமயம், சூழலியாளர்கள், பெரும்பாலும் மேல்தட்டு மனப்பாண்மையில் நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துக்களை பொழுதுபோக்கிற்கு எடுத்துவைக்கிறார்கள் என்று கூறுவதையும் பார்க்கவேண்டும். பொருளியல் ரீதியான மேற்கண்ட விசயங்களில் இருக்கும் அதே ஊசாலாட்டம் சில சமூகக் கருத்தியல் பிரச்சனைகளிலும் இருக்கிறது. அதுபற்றியும் எழுதவேண்டும்.

1 Comments:

  • At 2:53 PM, Blogger -/பெயரிலி. said…

    நீங்கள் இதைச் சொன்ன நாளிலே, நர்மதாவிலே (தேக்ரி அணை) சாவுகள்

     

Post a Comment

<< Home