enathu paarvai

Meyyappan valai pathivukal.

Friday, February 18, 2005

சலாமத் ததாங் - சலாமத் ஜலான்

ஐந்து வாரங்கள் பயணம் முடிந்து ஒருவழியாக மீண்டும் பழைய நிலைக்கு வந்தாகிவிட்டது. வழக்கமாக ஊர் செல்லுகையில் அங்கிங்கு ஊர் சுற்றல், புகைப்படம் எடுத்தல், நண்பர்களுடனான வெட்டிப்பேச்சு என்று போகும். இந்த முறை தோளில் சுமந்து சென்ற குதூகலப் பொதியினை ஊருக்குக் கூட்டிக்கொண்டு காட்டி வருவது தான் முக்கியமானதாக இருந்தது. பெரும்பாலும் குடும்பம், ஊர், உற்றார், உறவினர் குறித்த தனிப்பட்ட அளவினதான மகிழ்ச்சி. மற்றபடிக்கு முன்னர் சொன்னது போல குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக அவ்வளவாக இல்லை. தமிழகத்திற்கு செல்லும் வழியில் மலேசியாவில் ஒரு வாரம் சுற்றினோம். அது பற்றிய நினைவிலிருக்கும் சிறு குறிப்புகள் மட்டும்.

மலேசியா குறித்த உருவகம் சிறுவயதுச் சூழலினால் ஓரளவு உருவாகியிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்காசிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு இல்லாத செட்டிநாட்டுக் கிராமம் இருக்கமுடியாது. வீட்டிலிருந்த வயதானவர்களின் மூலம் கிடைத்த பார்வையும், அது குறித்த விமர்சனப் பார்வையும்,பின்னர் 'புயலிலே ஒரு தோணி' படித்து வந்த பார்வையும், மலேசியாவைக் குறித்த ஒரு எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்தது. தமிழர் 11% சதவீதம் வசிக்கும் நாடு என்பதும் எனது எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். தென்கிழக்காசியாவிலேயே மக்கள் தொகை ஒரு பிரச்சனையாக இல்லாத நாடு மலேசியா. இயற்கை வளங்களும் அதிகம். அதனால் சராசரி மக்களின் வாழ்க்கை முறை ஓரளவு வசதியானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நகரம் நோக்கிய நகர்வின் காரணமாக பெருநகரங்களில் மக்கள் பெருக்கமும், நெரிசலும், மாசும் இருக்கத்தான் செய்கிறது. கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் மலேசியா கட்டுமானத்துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அறிந்து கொண்டேன். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களைப் போலல்லாது பெரும்பாலான மலேசியத் தமிழர்கள் உடலுழைப்பு வேலைசெய்கிறார்கள். துப்புறவுத் தொழிலாளர்கள், மூட்டை சுமப்பவர்கள், கட்டிடக் கூலிவேலை செய்பவர்கள், விவசாயிகள் என்று நிறைய பார்க்கக் கிடைக்கிறார்கள். கல்வியைத் தொடர்வதிலும் பலசிக்கல்களைச் சந்திக்கிறார்கள். (இப்படியாக மானுடவியல் ஆராய்ச்சிப் பயணம் போன்ற ஒரு போக்குக் காட்டுகிறேன் என்றாலும், மலேசிய விமானத்தில் பயணச் செலவு குறைவு என்பதனையறிந்து, அப்படியே நாட்டையும் சுத்திப் பார்க்கலாம் என்ற நோக்கில் தான் சென்றேன் என்பது எல்லோருக்கும் தெரியும் தானே ;-) ).

எங்களது பயணம் பெரும்பாலும் பினாங்கு, அலோர் ஸ்டார், கோலாலம்பூரில் உள்ள வழக்கமான சுற்றுலாத் தளங்களை ஒட்டியே இருந்தது. பார்த்துப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோ ம். நாட்டின் உட்பகுதிகளைச் சென்று பார்க்க விருப்பமிருந்தாலும், நாங்கள் பெரும்பாலும் நகரத்தை விட்டகலா சுற்றுலாப் பாதைகளிலேயே சென்றோம். வழியில் நிறைய சிறு ஆச்சரியங்கள். கோலாலம்பூரின் உயரக் கோபுரமான கேஎல் டவரில் 'ஒலி வழிகாட்டி' வாடகைக்கு எடுத்துக்கொண்டோ ம். காதுக்குள் வைத்துக்கொண்டதும் இனிய தமிழில் மலேசியாவை பற்றிய விவரணை. தமிழ்நாட்டு இந்திய விமானத்திலே கூட தமிழைக் கேட்காத காதுகளுக்கு இதைக் கேட்டது ஆச்சரியம் வரத்தானே செய்யும். அதேபோல வானொலி பண்பலைத் தமிழும் கேட்பதற்கு வித்தியாசமானதாகவும், கொஞ்சம் உற்சாகமானதாகவும் இருந்தது. பின்னர் தான் சென்னையில் சூரியன், மிர்ச்சி இவற்றைக் கேட்டேன். ஆனால் மலேசியா வானொலியில் ஓரளவிற்கு சினிமாவைத் தவிர்த்த மற்ற நிகழ்ச்சிகளும் இருந்த மாதிரித் தோன்றியது. (ஒரு நிகழ்ச்சியின் தலைப்பு "ஆமாவா.. அப்படியா.. ஆஹாஆஆஆஆ". இதை அந்தப் பெண் உச்சரித்த முறை எங்கள் பையனுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது போல. ஓவ்வொருமுறை கேட்கையிலும் சிரிச்சுக்கிட்டே இருந்தான்).

ரோட்டோ ரத்தில் நிறைய இளநி கிடைத்தது. நகரத்தைத் தள்ளி இருந்த இடங்களில் நுங்கும் கிடைத்தது. கோலாலம்பூரில் மாலை புகழ்பெற்ற 'பெடாலிங் தெருவிற்கு"ச் சென்றோம். gucci கடிகாரங்களில் ஆரம்பித்து, இன்னும் வெளிவராத ஹாலிவுட் திரைப்படங்களின் டிவிடி, போலோ, ரீபொக் ஆடைகளென்று "சைனா டவுன்" முழுவதும் மலிவு விலையில் பொருட்கள். ஹாங்காங், தாய்லாந்திலிருந்து கொண்டுவந்து இங்கு விற்கிறார்கள். ஒரு சீனக் கடைக்காரர், எங்களைப் பார்த்து " வாங்க.. வாங்க.. பாப்பா தம்பியா.. தங்கையா " என்றளித்த வரவேற்பில், அவருடைய கடையில் சிரித்துக்கொண்டே சில பொருட்களை வாங்கினோம்.

பினாங்கில் கேக் லோக் சீ புத்தக்கோயிலின் ஆமைக்கூட்டம், பாம்புக் கோயிலில் ஒய்யாரமாகத் தூங்கும் பாம்புகள், சீன ரோட்டோ ர உணவுக் கடைகளில் கிடைக்கும் வகைவகையான பண்டங்கள், கோயிலின் வெளியில் விற்கும் சீனக் கைவினைப் பொருட்கள் இப்படியாக பெரும்பாலும் சீனத் தன்மையுடன் தான் இருந்தது. மற்றபடிக்கு அதிகம் கவர்ந்தது மலாய் உணவு.

உணவை ரசிக்கும் எவருக்கும் தென்கிழக்காசியா ஒரு அட்சயபாத்திரம் தான். மலாய் உணவகங்களின் உணவுப் பட்டியலே ஒரு நீண்ட கவிதைக்கு நிகராணது தான் ;-). ஒவ்வொரு வரியும் படிக்கையிலே பல்வேறு உணர்வு நிலைகளுக்கு இட்டுச் செல்லுகிறது. சீன, மலாய், தாய் , தமிழக, இஸ்லாமிய சமையல் முறைகள் ஒருமிக்கையில் உருவாகும் பல்வேறு சாத்தியங்கள். தவிர பருவநிலை காரணமாக விளையும் வகைவகையான் காய்கறிகள், கீரை வகைகள், சூழ்ந்த கடலில் கிடைக்கும் வகைவவையான மீன்கள், மா,பலா,வாழை,கொய்யா தவிர லொங்கான், ரம்பூதான், மங்குஸ்தான், பைனாப்பிள் என்று சமையலுக்குத் தேவையான பொருட்களின் மிகுதியும் காரணமாக இருக்கலாம். டுரியன் பழத்தைப் பற்றி நிறைய இடத்தில் படித்திருப்பீர்கள்.

Roti jalanகடைகளில் வீச்சுப் பரோட்டா, முட்டைப் பரோட்டா ஆகியவை கிடைக்கும், அமெரிக்க மலாய் உணவகங்களிலும் பெரும்பாலும் இவை கிடைக்கிறது. ஆனால் நான் பார்த்து அதிசயப்பட்டது "ரோட்டி ஜாலா" (தமிழில் சொன்னால் வலைத்தோசை !). துளையிட்ட கரண்டியின் மூலம் இந்தத் தோசை ஊற்றுவதைப் பார்ப்பதே ஒரு நல்ல அனுபவந்தான். ஏறக்குறைய தென்னைமரத்தில் கிளையை மரத்துடன் பிணைக்கும் சல்லடையைப் போன்ற தோற்றம். காரமான கோழிக்குழம்புடன் பரிமாறுகிறார்கள்.

கோய் தியாவும் எனக்கு மிகவும் பிடித்தது. சீனர்களின் மலாய் ரோட்டுக்கடைகளில் நாசிலாமா (உள்ளடக்கம்: தேங்காய் சாதம், வரமிளகாய்த் துவையல், சிறுமீன் பொறியல்) பொட்டலங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இரண்டு பொட்டலங்களையும் ஒரு கப் மலாய் கோப்பியும் குடிப்பதாக நினைத்தாலே ஒரு திருப்தியான புன்னகை தோன்றுகிறது. இன்னும் சீனர்கள் நடத்து ஹாக்கர் கடைகளின் உணவைப் பற்றி நிறைய எழுதலாம். இன்னொரு முறை எழுதவேண்டும்.

படங்கள் இணையத்திலிருந்து உருவியது.
சலாமத் ததாங் - சலாமத் ஜலான் : வணக்கம் - டாடா (மலாய்)

20 Comments:

 • At 3:43 PM, Blogger -/பெயரிலி. said…

  /நாசிலாமா (உள்ளடக்கம்: தேங்காய் சாதம், வரமிளகாய்த் துவையல், சிறுமீன் பொறியல்) /
  இதுக்கு நாசிபோகுமா என்றே வைத்திருக்கலாம் ;-)

   
 • At 4:02 PM, Blogger Meyyappan Meyyappan said…

  //இதுக்கு நாசிபோகுமா என்றே வைத்திருக்கலாம் ;-)

  சிறுமீன் பொறியல் என்று சொன்னது 'இகான் பிலிஸ்' எனும் கருவாடு தானே. இந்த மூக்கு விசயம் ஆரம்பத்தில் கொஞ்சம் உறுத்தியது. மூக்கு வேற நாக்கு வேற என்ற ஞானம் வந்தவுடன் சரியாயிட்டது ;-)

   
 • At 4:07 PM, Blogger -/பெயரிலி. said…

  என்னே பொய்யப்பா? மூக்கிலாமல் நாக்கு சுவைக்குமா, என்ன? கருவாட்டை விடுங்கள்;
  தோழர் கதிர் எப்படியாக இருக்கிறார்? ஊர் பிடித்திருந்ததாமா? பிறகு பேசுகிறேன்.

   
 • At 4:13 PM, Blogger SnackDragon said…

  சுவையான பதிவு; காதில் புகைதான் ஏன் வருகிறது எனத் தெரியவில்லை!!
  சமீபத்தில் அருகில் ஒரு பினாங் உணவகத்து நண்பர்கள் புடைசூழ சென்று வெகு நேரம் மெனு கார்டைத்திருப்பித்திருப்பிப்பார்த்து 7 ரோட்டி கானாய்; 7 நாசி லாமாக் ஆர்டர் செய்தபோது அவள் அனேகமாக நாசியில் தான் சிரித்தாள். அப்படி என்னதான் அந்த நாசி லாமாகில் இருக்கோ; எனக்கென்ன ஒரு வெகிடபிள் ப்ரைட் ரைஸ்தான் ; வேறென்ன !! :-(

  ஒரு உணவின் பேர் ; சராங் புராங்!!! (உராங் உடான் மாதிரியே இல்ல )

   
 • At 4:17 PM, Blogger SnackDragon said…

  //பிறகு பேசுகிறேன்.//
  ஆகட்டும் நடக்குதா பார்ப்போம். :p

   
 • At 4:34 PM, Blogger -/பெயரிலி. said…

  /பிறகு பேசுகிறேன்./
  //ஆகட்டும் நடக்குதா பார்ப்போம். :p//
  ஆகா! சந்தர்ப்பம் பார்த்துச் சந்தடியில தட்டுறான் பார் சிமார்ட்டு ;-)

   
 • At 4:51 PM, Blogger SnackDragon said…

  ஆமா நாங்க சந்தர்ப்பம் கிடைக்குபோது உண்மையை உலகத்துக்கு உணர்த்துற ஜாதி!! :))

   
 • At 5:44 PM, Blogger Thangamani said…

  //ஆமா நாங்க சந்தர்ப்பம் கிடைக்குபோது உண்மையை உலகத்துக்கு உணர்த்துற ஜாதி!! :))//

  இங்கு சாதிப்பெருமை பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.:))

  //தென்னைமரத்தில் கிளையை மரத்துடன் பிணைக்கும் சல்லடையைப் போன்ற//

  அதன் பெயர் பன்னாடை என்று நினைவு (இப்படித் திட்டுவது உண்டு)

  மெய்யப்பன் நல்ல பதிவு. குதூகலபொதி நலமா? :)

   
 • At 6:50 PM, Blogger வசந்தன்(Vasanthan) said…

  அதுசரி, பன்னாடையெண்டு ஏன் திட்டுறவை தெரியுமோ? ஆருக்காவது தெரிஞ்சால் சொல்லுங்கோ பாப்பம்.

   
 • At 9:42 PM, Blogger Meyyappan Meyyappan said…

  பெயரீலி: தோழர் கதிர் முற்போக்குவதியல்லாமல் ஒரு பின்நவீனத்துவவாதியாகவே வருவார் போல. ஒரு அடி முன்னாள் தவழ்ந்தால், மூனு அடி பின்னால் போகிறார் ;-).
  கார்த்திக்: உரான் உடாங்கா.. அந்த பினாங்கு ரெஸ்டாரண்டு எங்கேயென்று சொல்லுங்க.. இங்கேயிருப்பதில் அதெல்லாம் சமைப்பதில்லை போல.
  தங்கமணி: பொதி ஒரே குதியாட்டம் போடுது. பன்னாடைக்கு நன்றி. தோகையென்றும் சொல்வார்களோ, சரியாக நினைவிலில்லை.
  வசந்தன்: யாரும் சொல்லாம போய்ட்டா நீங்களே சொல்லுவீங்க தானே.

   
 • At 12:31 AM, Blogger Shankar said…

  அவற்றையெல்லாம் அவற்றிற்குத்தானே போர்த்துவார்கள்! அதனால் தான் :))

   
 • At 12:54 AM, Blogger மு. சுந்தரமூர்த்தி said…

  மாணாக்கர்களில் மூன்று வகை உண்டு. முதல் மாணாக்கன், இடை மாணாக்கன், கடை மாணாக்கன். முதல் மாணாக்கனுக்கு உதாரணம் அன்னப்பறவை. பாலையும், நீரையும் கலந்து கொடுத்தாலும் பாலை மட்டும் பருகி நீரை விட்டுவிடும், நல்ல மாணாக்கனைப் போல. கடை மாணாக்கனுக்கு உதாரணம் பன்னாடை. கரும்பைப் பிழிந்து பன்னாடையில் வடிகட்டினால் சாறை விட்டுவிட்டு கசடை மட்டும் வைத்துக்கொள்ளும், மோசமான மாணாக்கனைப் போல. இடை மாணாக்கனுக்கு உதாரணம் மறந்துவிட்டது. நீங்களே ஏதாவது கற்பனை செய்துகொள்ளுங்கள்.
  (பஞ்சாடை என்பது தான் மருவி பன்னாடை ஆனது)

  சின்னவயதில் என் தகப்பனார் சொன்னது. ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தவர். எத்தனையோஅன்னப்பறவைகளையும், பன்னாடைகளையும் பார்த்திருப்பார் :-).

  மெய்யப்பன்:
  நல்ல பதிவு. மலேசியன் ஏர்லைன்ஸில் பயணம் செய்தால் ஓட்டல் அறையும், தற்காலிக விசாவும் கொடுத்து கண்டிப்பாக ஒரு நாள் ஊர் சுற்ற விடுகிறார்கள். அந்த ஓட்டலின் உணவகத்தில் இருந்த உணவு வகைகள் ஒவ்வொன்றையும் சுவை பார்க்கவேண்டுமென்றால் ஒருவாரமாவது தங்கவேண்டும்.

   
 • At 4:56 AM, Blogger Thangamani said…

  தோழர் கதிர் முற்போக்குவதியல்லாமல் ஒரு பின்நவீனத்துவவாதியாகவே வருவார் போல. ஒரு அடி முன்னாள் தவழ்ந்தால், மூனு அடி பின்னால் போகிறார் ;-).
  :))

   
 • At 8:41 AM, Blogger இராம.கி said…

  பன்னல் என்றாலும் பஞ்சு தான். ஆனால் இது பன்னுதல் என்ற வினையில் பிறந்த சொல். பன்னுதல் = முடைதல், பன்னப் பட்டது பன்னாடை. பன்னல் இன்று பின்னல் என்றும் வழங்குகிறது.

  அன்புடன்,
  இராம.கி.

   
 • At 11:40 AM, Blogger Meyyappan Meyyappan said…

  சங்கர்: ://அவற்றிற்குத்தானே போர்த்துவார்கள்! // :)
  சுந்தரமூர்த்தி, இராம.கி: பன்னாடை குறித்த தகவலுக்கு நன்றி.
  சுந்தரமூர்த்தி: ஆம். ஒரு நாள் அங்கே தங்குவது, ஊர்சுற்றிப்பார்ப்பது எல்லாவற்றையும் அவர்களெ செய்து தருகிறார்கள். நாங்கள் ஒருவாரம் இருந்ததால் அந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை.

   
 • At 7:34 PM, Blogger வசந்தன்(Vasanthan) said…

  சுந்தரமூர்த்தியின் பன்னாடைக்கான விளக்கம் சரி. எங்கட ஊரில இத கள்ளு வடிக்கிறதுக்குப் பாவிக்கிறவை. ஆனால் இராம.கி. பன்னுதல் என்பதற்குக் கூறிய விளக்கமே சரி. (பன்னுதல்-பின்னுதல- இழைத்தல்).

   
 • At 7:49 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said…

  சரி எல்லோரும் பன்னாடைக்கு விளக்கம் கொடுக்கிறார்கள் நான் நாசி லெமாக் இற்கு விளக்கம் கொடுப்போம்.
  மலாய் மொழியில் நாசி என்றால் சோறு லெமாக் என்றால் தேங்காய்
  நாசி லெமாக் என்றால் தேங்காய்ப்பாலில் அவித்த சோறு.காரசாரமாக இருப்பதால் எனக்கு பிடித்த உணவு

   
 • At 9:48 PM, Blogger சுந்தரவடிவேல் said…

  ரொட்டி ஜாலமெல்லாம் சரிதான், ஆனா நீங்களும் உஜாலாவுக்கு மாறிட்டீங்களா?

   
 • At 11:20 AM, Blogger edwardmartinez9454 said…

  I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog

   
 • At 6:10 PM, Blogger matthewmartinez6767 said…

  I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog

  http://pennystockinvestment.blogspot.com

   

Post a Comment

<< Home