enathu paarvai

Meyyappan valai pathivukal.

Thursday, June 24, 2004

இளங்கதிரே வருக!!!

என் அன்பு சுஜாவிற்கும் எனக்கும் இது இன்னொரு நாள் அல்ல. நாங்கள் கைகோர்த்து நடந்து வந்த சின்ன இரட்டையடிப் பாதையோரச் செடிகளின் பூக்களும், தளிர்களும், விடியலின் இளமஞ்சள் நிற கதிரொளி பட்டுத் தகதகக்கிறது. கைகளில் அசையும் இந்த இளந்தளிர், எங்களது கண்களில்
மகிழ்ச்சியையும், பூரிப்பையும், ஆனந்தத்தையும் நிறைக்கிறது. எழுப்பும் சிறுகுரலில் அனைத்துப் புலன்களும் அளவிடமுடியாத ஆனந்தத்தில் திளைக்கின்றன. மனம் உவகையில் நிரம்பித் தளும்புகிறது. இந்த அதிகாலை கதிரவனின் ஒளி எங்களுக்கு வரப்போகும் நாட்கள் குறித்த நம்பிக்கையையும், கடந்து வந்த நாட்கள் குறித்த உவப்பையும், இந்த நிமிடத்திற்கான சிறகையும் அளிக்கிறது.

வீடும் மருத்துவமனையும், இரவும் பகலும், களைப்பும், களிப்புமாக கடந்த இந்த சில தினங்கள் கனவில்லை என்று மெதுவாக கண்ணைத் திறந்துமூடித் திறந்தபடி கொஞ்சம் புன்னகையையும், சிறிது பாலையும் உதட்டோ ரத்தில் வழியவிடுகிறது..

நண்பர்களே, எங்களது இனிய மகன் பிறந்த செய்தியை தெரிவிப்பதில் மிக்க மகிழ்வடைகிறோம். ஜூன் 19ம் இரவு பிறந்த அவனுக்கு "கதிர் மெய்யப்பன்" என்று பெயரிட்டிருக்கிறோம். கதிர் 6 பவுண்டு 7 அவுன்ஸ் மாசறுபொன்னாக வந்தான் :-). மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு இன்று வந்த கதிர், தற்பொழுது தூங்கிக்கொண்டிருக்கிறான்... நாங்கள் கனவுகண்டுகொண்டிருக்கிறோம் :-).


Baby Kathir Meyyappan

கதிர் மெய்யப்பன்


புதிய அப்பா: மெய்யப்பன்.
புதிய அம்மா: சுஜா
பதவி வழங்கியவர்: கதிர்
நாள்: ஜூன் 19, மாலை 6:56.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, June 15, 2004

முள்ளை: முள்ளும் முள்சார்ந்த இடமும்

விடியக்காலை ஆறுமணி. பாதித்தூக்கத்தில் எழுந்து பல்விளக்கி, காப்பியைக் குடிச்சுட்டு, டைப்ரைட்டிங் கிளாஸ்போகும் அவசரத்தில், வேகமாகப் மரப்பலகையை வாசப்படியில் வச்சு சைக்கிளை இறக்கையில், வழக்கத்திற்கு மாறாக தட்தட்டென்று பின் டயர் அடிபடும்போதே தெரிந்துவிடும், இன்னைக்கு காலையில அவ்வளவுதான் என்று. நடந்துபோகனும் அல்லது பஞ்சர் பாக்கனும். வாரத்திற்கு இரண்டு நாள் பஞ்சருக்குக் காசு கேட்பதிற்கு பதிலாக பஞ்சர் பாக்கும் செட்டு வாங்கினப்புறம் நானே பஞ்சர் பார்ப்பேன். இரண்டு நெம்புகம்பிகள், ஒரு உப்புத்தாள் ஒட்டிய மரக்கட்டை, பழைய சைக்கிள் டியூப் துண்டுகள், கத்தரிக்கோல், சொல்யூசன் எனப்படும் ஒட்டும் பசை, தண்ணீர் நிறைந்த பாத்திரம் இது தான் செட்டு. (கடையில் தொழில்முறை பஞ்சர் பார்ப்பவர்கள், ஒரு தீப்பெட்டி வச்சு sizzler மாதிரி பசையை லேசாக எரித்துச் சேர்ப்பார்கள். அதெல்லாம் நமக்கு வராது). பஞ்சர் பார்க்கும் பொழுது முழுதும் ஜவகர்லால் நேருவைக் கண்டபடி திட்டிக்கொண்டேதான் பார்ப்பேன். சின்ன வயதிலேயே சோஷலிசத்தையும், பஞ்சசீலம், அணிசேரக்கொள்கையெலையெல்லாம் கரைத்துக்குடித்து பெரும் சமூகவிஞ்ஞானியாக வளரப்போவதற்கான அறிகுறி என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். ஒரு சீலமுந்தெரியாது. எல்லாம் வேலிக்காத்தானால் தான்.

சீமைக்கருவை, வேலிக்காத்தான் என்றும் சொல்லப்படும் இந்த வேலிக்கருவை எங்கவூர் பகுதியெல்லாம் பறந்துகிடக்கும். இதை வெறுக்காத சிறுவர்களைப் பார்க்கமுடியாது. ஒவ்வொரு சந்தையிலும் 'முள்ளுவாங்கி' விக்கிறவருக்கு வியாபாரம் நல்லாத்தான் இருக்கும். ஒரு தடவை எனக்கு முள்ளுகுத்தி ரொம்பநாளாகி, அப்புறம் முடிதிருத்தகத்துக்குப் போய்த்தான் எடுக்க முடிந்தது. முள்ளு குத்திச்சுனா, முதலில் அம்மாவின் ஊக்கு, அடுத்து அப்பவின் முள்வாங்கி. அதுக்கு மசியலைட்னா முடிதிருத்தகம்தான். சிலசமயம் சுடும் அடுப்புக்கொண்டையில் காலைஅமுக்கி ஒத்தடம் கொடுக்கும் சூட்டுவைத்தியமும் உண்டு. நெருஞ்சி முள்ளுன்னா பரவாயில்லை, அப்படியே காலைத்தேய்ச்சுட்டு போயிடலாம். ஆனால் இந்த வேலிக்கருவை முள்ளை ஒன்னும் பண்ணமுடியாது.

பெரும்பாலும் சாலையோரத்தில், வண்டிப்பாதையில் இருக்கும் வேலிக்கருவைம் பெரும் மரமாக வளராது. சின்னச் செடியளவிலே இருக்கும். ஆனால் கம்மாக்கரை, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குமிடத்தில் வளரும் மரங்கள் தான் நல்ல பெரிசா வள்ரும். வேலிக்கருவையின் இலைகளை ஆடு விரும்பிச்சாப்பிடும். வேலிக்கருவையில் 'கோடாங்கி' என்று ஒரு பூச்சி இருக்கும். சாம்பல் நிறத்தில் ஒரு மிளகளவு இருக்கும் இந்தப் பூச்சியை எடுத்து உள்ளங்கையிலோ, தரையிலோ வச்சு 'ஆடுறா கோடாங்கி, ஆடுறா கோடாங்கின்னு' கத்துனா, தலைகீழா நின்னுக்கிட்டு சும்மா கிர்ருன்னு சுத்தும். சிலசம்யம் அதன் கொம்பு (?) கையில குத்தக்கூடச் செய்யும். வேலிக்கருவை நெத்தை கடிச்சா லேசா இனிக்கும். சின்னக்காயா இருக்கையில பாக்கிறதுக்கு கொத்தவரைக்காய் மாதிரியே இருக்கும். எல்லாஞ்சரிதான், ஆனால் காஞ்சமுள்ளுதான் பிரச்சனையே. காஞ்சமுள்ளு பாஞ்சால் ரெண்டுநாளக்கி கெந்தி கெந்தித்தான் நடக்கனும்.

தாத்தாக்கள் காலத்திலெல்லாம் இந்தத் தொல்லையில்லை போல. "வானம் பாத்த பூமிதானே, அதனால அப்பவும் முள்ளு இருக்கும் ஆனால் கருவேல முள்ளோ, கள்ளி முள்ளோ, எலிவேலி முள்ளோ தான். இந்த வேலிகருவை இப்பத்தான் வந்துச்சு. ஒரு தடவை நேரு ஆப்பிரிக்காவில இதைப் பத்திக் கேட்டாராம். அப்புறம் ஹெலிகாப்டரு வச்சு, தமிழ்நாடு பூரா இந்த விதையைத் தூவச்சொன்னாராம். அதுக்கப்புறம் தான் இந்த மாதிரி எங்கபாத்தாலும் சீமைக்கருவை மண்டிச்சு" அப்படின்னு ஒருதடவை ஒருத்தரு சொன்னதைக் கேட்டப்புறம் தான் நேருவுக்கு அவ்வளவு வசவும்.

பிபிசி யில் எத்தியோப்பிய நாடோ டிப் பண்ணைக்காரர் ஒருவரைப் பற்றிய புகைப்படக்கட்டுரையில் இருந்த ஒரு படம்தான் மீண்டும் வேலிக்கருவையை நினைக்க வைத்தது. அங்கும், எழுபதுகளில் சோஷலிஸ்டுகளின் ஆட்சிக்காலத்தில், வறண்ட நிலத்தினத்தினைப் பண்படுத்த இந்த வேலிக்கருவையைக் (Prosopis juliflora) கொண்டுவந்திருக்கிறார்கள். அது இந்த முப்பது ஆண்டுகளில் எத்தியோப்பிய மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்துவிட்டது என்று சொல்கிறார்கள். இது உண்மையில் எப்பொழுது தமிழகத்தில் புகுத்தப்பட்டது, அதற்கான காரணங்கள் என்ன, தற்பொழுது இதன் நிலை என்ன என்று அறிந்து கொள்ள இணையத்தில் தேடியதில் நல்ல தகவற்பக்கங்கள் கிடைக்கவில்லை. மெதுவாகத் தேடிப் பார்க்கவேண்டும்.

ஆனால், வேலிக்கருவை மரங்களால் நிறையப் பயனும் இருப்பதை சொல்லவேண்டும். அவ்வப்பொழுது மரங்களை வெட்டி மூட்டம் போடுவதில் நிறைய எர்பொருள் கிடைக்கிறது. கிராமங்களில் எரிப்பதற்கு பொறுக்கப்படுவது பெரும்பாலும் வேலிக்கருவைச் சுள்ளி தான். உவர்நிலங்களை மீட்பதற்கும் இதனை நடுவதாகச் சில பக்கங்கள் சொல்கிறது. தற்பொழுது ராஜஸ்தானிலும் இதனைப் புகுத்துவதாகப் படிக்கிறேன். ஒருபக்கம் நிலத்தை ஆக்கிரமித்து வளர்ந்தும், இன்னொரு புறம் ஓரளவு பயனும் தரும் இதனைப் பற்றிய கேள்விகள். வேலிக்கருவையின் வேறு பயன்களை இந்தப் பக்கம் விவரிக்கிறது.


* எப்பொழுது யாரால் வேலிக்கருவை தமிழகத்தில் புகுத்தப்பட்டது
* புகுத்தியதின் நோக்கம் நிறைவேறியிருக்கிறதா.
* புகுத்துகையில் இது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் என்று அறிந்திருந்தனரா
* ( தக்காளி, பச்சைமிளகாய், ஆலைக்கரும்பு தவிர்த்து) வேலிக்கருவையைப் போல வேறு எந்த வகைத் தாவரங்கள், மிருகங்கள் தமிழகத்தில் புகுத்தப்பட்டு ஆக்கிரமித்திருக்கிறது. (வெங்காயத்/ (ஆகாயத் ?) தாமரை, பார்த்தீனியம் போன்றவை). இவை இலங்கையிலும் இருக்கிறதா.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, June 06, 2004

வலைப்பூவில் வேலை

இன்னும் ஒருவாரத்திற்கு வலைப்பூவில் வேலை.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.