enathu paarvai

Meyyappan valai pathivukal.

Friday, July 30, 2004

கோட்டைமதில் கருத்தியல் பூனை

அருளின் அண்டைஅயலில் பசுமைப்புரட்சி பற்றி எழுதியிருந்தார். படித்தபின் யோசிக்கையில் நெடுங்காலமாக மனதில் இருந்த கருத்தியல் சார்ந்த ஊசலாட்டம் அங்குமிங்குமாய் மீண்டும் ஆடஆரம்பித்தது. பசி தீர்த்த பசுமைப்புரட்சியை, வெண்மைப்புரட்சியை ஒரு தளத்தில் அப்படியே ஏற்றுக்கொள்ளுகையில் இன்னொரு தளத்தில் அதன் பின்விளைவுகளாக சூழலியலாளர்கள் குறிப்பிடுவனவற்றைப் படிக்கையில் பசுமைப்புரட்சி பற்றிய கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.

பசுமைப்புரட்சி என்றில்லை, பல்வேறு விஷயங்கள் பற்றி முற்றுமுடிவான கருத்து எடுக்க முடியாததாக இருக்கிறது. அணுசக்தி, நீர்பாசனத்திற்கான பெரிய அனைக்கட்டுகள், நதிநீர் இணைப்பு, மரபணுத் தொழில்நுட்பம், தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற நவீன கருத்தாக்கங்கள் முதல் புராதன மத,கலைச் சின்னங்கள் வரை இந்த ஊடாட்டம் இருந்து வருகிறது. ஒருநிலையில் அனுசக்தி, புதிய அணுஉலைக்கான எதிர்ப்பை என்னால் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. ஆனால், அதே சமயம் எரிபொருளுக்கான தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக்க, இன்னும் எக்கச்சக்கமான கிராம நகரங்கள் அறிவிக்கப்பட்ட,படாத மின்வெட்டுக்களில் ஆழ்ந்துகொண்டிருக்கையில் புதிய அணு உலைக்கான தேவையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

பெரிய அனைகளுக்கான எதிராக முன்வைக்கும் காரணங்கள் பல மிகவும் முக்கியமானவை. இன்றைய உஸ்பெகிஸ்தான், அன்றைய சோவியத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அமு தார்ய, சிர் தார்ய நதி திருப்பல் திட்டம் இன்றைக்கு ஏரல் கடலையே அழித்து, அந்தப் பிரதேசத்தையே ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருப்பதைப் பற்றிப் படிக்கிறோம். நிலம்சூழ் கடலில் கலந்துகொண்டிருந்த நதியின் போக்கைத் திருப்பி லட்சக்கணக்கான ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்ய்ப்பட்டது. இதனால், நதிநீர் வரத்துக் குறைந்து கடலில் உப்புத்தன்மை அதிகமாகி, கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து, கடலின் பரப்பளவு மூன்றில் ஒன்றாகச் சுருங்கி, சுகாதாரக் கேட்டிற்கு வித்திடுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருந்த இயற்கையின் இயக்கத்தை நாற்பதாண்டுகால மனித இடையூறு அழித்துவிட்டிருக்கிறது. இந்தத் திட்டம் அந்தப் பகுதியின் பருத்தி உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அளித்த பங்கைவிட பலமடங்கு துயரத்தை அழித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரம், சீனாவின் துயரம் என்றழைக்கப்பட்ட, ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்த மஞ்சள் நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளோ, மற்ற அணைகளோ காத்த உயிர்களை எண்ணிப்பார்க்கையில் இந்தச் சமன்பாடு மிகவும் சிக்கலாகிறது.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு நேரடியானது, அறிவின் அடிப்படையில் அனுகக்கூடியது என்ற பெருங்கதையாடலே நவீனத்துவத்தின் அடிப்படை. நவீனத்துவத்தின் போதாமைகளும், குழப்பங்களும் வெளித்தெரிய ஆரம்பிக்கையிலே தான் மையமற்ற பின்நவீனத்துவக் கருத்துக்கள் தோன்றின. அரசுகளின் பெரிய திட்டங்கள் பெரிய தோல்விகளாக மாறினால் விளைவு விபரீதமாகும். ஆனால் மூன்றாம் உலகநாடுகளின் பெரும்பாலான பிரச்சனைகளில் அவர்களுக்குமுன் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒரே வழியில் பயனிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனாலேயே பெரிய திட்டங்களின் பயன்களும், பின்விளைவுகளுக்குமிடையில் குறுகியகால நோக்கில் முடிவுகள் எடுக்கவேண்டியிருக்கிறது.

வந்தன சிவா போன்றோர் பசுமைப்புரட்சிக்கு எதிராக எடுத்துவைக்கும் காரணங்களை நாம் நிராகரித்துவிட முடியாது. அதே சமயம், சூழலியாளர்கள், பெரும்பாலும் மேல்தட்டு மனப்பாண்மையில் நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துக்களை பொழுதுபோக்கிற்கு எடுத்துவைக்கிறார்கள் என்று கூறுவதையும் பார்க்கவேண்டும். பொருளியல் ரீதியான மேற்கண்ட விசயங்களில் இருக்கும் அதே ஊசாலாட்டம் சில சமூகக் கருத்தியல் பிரச்சனைகளிலும் இருக்கிறது. அதுபற்றியும் எழுதவேண்டும்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 26, 2004

தீ

கும்பகோணம் தீவிபத்து நடந்து சில நாட்கள் ஆகிவிட்டது. பலவிதமான கருத்துக்களும் பார்வைகளும் செய்திகளும் படிக்கக் கிடைத்தன. நேரடியாகவும், மறைமுகமாகவும் சூழலின் நிகழ்வுகள் நம்மை பாதிக்கின்றன. மறுத்தலும், கோபமும், இயலாமையும் தொடர்ந்த செயலற்ற தன்மையும் என்னளவில் கொண்ட உணர்ச்சிகள். போட்டிகள் நிறைந்திருக்கும் சூழலில் 'தன்னைப்பேணி'யாக வளர்ந்துவிட்ட நிலையில், தொடர்ந்து நடக்கும் வன்கொடுமைகளையும், பேரிழப்புகளையும், அராஜகங்களையும், கண்டுகொள்ளாமல் சென்றுவிட பழகிவிட்டோம். நம்முடைய செய்கைகள் திரும்பமுடியாத நிலைக்குச் சென்றுவிட்டதாய் பழிபோட்டுவிட்டு, நாளைய வாழ்வைப்பற்றிய நம்பிக்கைகளை குழந்தைகளின் மீதேற்றிய  எங்கள் கவனக்குறைவும், உதாசீனமும் குழந்தைகளையே எரித்துவிட்டது. ஆறுதல்கள், புதிய விதிமுறைகள், தண்டனைகள், கண்டனங்கள், தீர்மானங்கள் என்று எப்படியோ நடந்ததை நினைத்து அடுத்த படிக்குச் செல்கையில்,   ஆவணங்களைக் கொளுத்த இரண்டாவது முறையாய் பற்றை வைத்த தீ, எங்களது மேல்பூச்சையெல்லாம் சடாரென்று விலக்கி அடியில் புரையோடியிருக்கும் எங்களது  சமூகக்கடமை உணர்வை வெளிப்படுத்துகிறது. இப்படித்தான் நாங்கள் ஓவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொள்கிறோம். மூடிமறைப்பது, எரித்து அழிப்பது, கைகாட்டுவது , தட்டிக்கழிப்பது...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, July 02, 2004

பிராண்டோவின் தேயும் குரல்

மார்லன் பிராண்டோ இறந்துவிட்டார். மிகவும் பிடித்த 'அபாகலிப்ஸ் நவ்' (Apocalypse Now) திரைப்படத்திலிருந்து கர்னல்.கர்ட்ஸ் (மார்லன் பிராண்டோ ) குரலில் சில வார்த்தைகள்.


சவரக்கத்தியின் கூர்முனையில் நத்தை நகருவதை பார்த்தேன். கூர்முனையில் மெதுவாக ஊர்ந்து, வழுக்கி வழுக்கி நகர்ந்து, பின் உயிர்த்திருப்பது.. அது ஒரு கனவு, கெட்ட கனவு.
...
நான் குழந்தையாய் இருக்கையில் அந்த நதியில் பயணித்திருக்கிறேன். நதியில் ஒரு இடமிருக்கிறது சரியாக நினைவில் இல்ல. அது கொன்றை மரங்கள் நிறைய வளர்க்கும் இடமாக இருக்கவேண்டும். கட்டற்று காடாக வளர்ந்திருந்தது. சொர்க்கமே இந்த கொன்றை மரங்கள் வடிவாக கீழே இறங்கிவிட்டதோ என்று தோன்றும். உண்மையான சுதந்திரத்தைப் பற்றி எப்போதாவது நினைத்திருக்கிறாயா? சுதந்திரம் - மற்றவர்களுடைய பார்வையில் கருத்துக்களிலிருந்து.. உன்னுடைய கருத்துக்களிலிருந்தே சுதந்திரம்?
...
அந்த இளைஞர்களுக்கு மக்களின் மீது குண்டுகளை வீசச் சொல்லித்தருகிறார்கள் . ஆனால் அவர்களின் போர்விமானத்தில் 'fuck' என்று எழுத அனுமதிக்கமாட்டார்கள். ஏனென்றால் அது அருவருப்பானது..
...
நாம் அவர்கள் எல்லோரையும் கொல்ல வேண்டும். கொன்று எரிக்க வேண்டும். ஓவ்வொரு பன்றியையும், ஒவ்வொரு மாட்டையும், ஒவ்வொரு ஊரையும், ஓவ்வொரு படையையும். என்னைக் கொலைகாரன் என்கிறார்கள். கொலைகாரர்களே இன்னொருவனைக் கொலைகாரன் என்று சொல்வதை என்ன செய்வது? அவர்கள் பொய்யர்கள்.. அவர்கள் பொய்யர்கள், நாம் பொய்யர்களிடத்தில் கருணையுடனிருக்கவேண்டும்.
....
நான் திகிலூட்டும் கொடுமைகளை பார்த்திருக்கிறேன், நீயும் கூட. ஆனால் என்னைக் கொலைகாரன் என்று சொல்ல உனக்கு உரிமையில்லை. உனக்கு என்னைக் கொல்ல உரிமையிருக்கிறது, ஆனால் என்னை எடைபோடுவதற்கு அல்ல. வன்கொடுமையைப் பற்றித் தெரியாதவருக்கு வெறும் வார்த்தைகளால் அவற்றை விவரிக்க முடியவே முடியாது. கொடுமை.. கொடுமைக்கு ஒரு முகமிருக்கிறது. அதனை நண்பனாக்கிக் கொள்ளவேண்டும். கொடுமையும், ஒழுக்கமும் உன்னுடைய நண்பர்கள். நண்பர்கள் இல்லையென்றால், அவை உனது முக்கியமான எதிரிகள். எப்பொழுதும் பயப்படவேண்டிய எதிரிகள். நான் இராணுவத்தில் இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.. யுகங்கள் கடந்துவிட்டது போலத் தோன்றுகிறது... அன்று குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கையில், அந்தக் கிழவன் எங்களை நோக்கி பெரும் அழுகையோடு ஓடிவந்தான். அவனுடன் போய் பார்க்கையில் தடுப்பூசி போட்ட எல்லாக் கைகளையும் அவர்கள் வெட்டியிருந்தார்கள். அங்கே ஓரமாக அந்தக் குவியல்.. பிஞ்சுக் கரங்களின் குவியல். நான் அழுதேன்.. ஒரு பாட்டியைப் போல அழுதேன். என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. நான் அதைப்பற்றி நினைக்க வேண்டும். அதை மறக்கவே கூடாது.. கூடவே கூடாது என்று நினைத்துக்கொண்டேன். தீடிரென்று என் பொட்டில் சுட்டது போலிருந்தது. ஒரு வைர புல்லட்டை வைத்து சுட்டது போலிருந்தது...

கர்னல் கர்ட்ஸ் பாடும் டி.எஸ்.எலியட்டின் கவிதை:

நாம் தக்கை மனிதர்கள்
தலைக்குள் வைக்கோல் திணித்த
தக்கை மனிதர்கள்
வறண்ட குரலில்
நமக்குள் கிசுகிசுப்பது
அமைதியாய் அர்த்தமற்றதாய் இருக்கிறது
முடங்கிய படையாய், அசைவில்லாச் சைகையாய்
வண்ணமில்ல நிழலாய், வடிவமில்லாப் பொதியாய்
உலர்ந்த புல்லின்மீது காற்றாய்
உடைந்த கண்ணாடியின் மீது எலியாய்
நிலவறையில் இருக்கிறோம்...

Apocalypse Now திரைக்கதை வசனம் எடுத்த இடம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.