enathu paarvai

Meyyappan valai pathivukal.

Saturday, May 29, 2004

செம்மொழி ஏன் ஆக்கவேண்டும்?

முந்தைய பதிவு

தமிழ் ஏன் செம்மொழி என்று தமிழரிடத்தில் பொதுவான கேள்விகள் இல்லை. அதைத் தாண்டி, தமிழ் ஒரு செம்மொழி என்று ஏற்றுக்கொண்டு தமிழை செம்மொழியாக அறிவித்தாலென்ன ÀÂý? அப்பொழுது மட்டும் புதிதாக் என்ன ஆகிவிடப்போகிறது என்ற கேள்விகள் தான் நம்மிடையே இருக்கிறது. தமிழைச் செம்மொழி ஆக்கச்சொல்லி நடக்கும் விவாதங்களும் போராட்டங்களும் 1800களின் பிற்பகுதியிலேயே ஆரம்பமாகிவிட்டது என்று தெரிகிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்தப் போராட்டங்களைப் பற்றி விரிவாக நமக்குத் தெரியவராமல் இருப்பது நம் துற்பேறு.

நடுவண் அரசு சமஸ்கிருதம் பாரசீகம், அரபி ஆகியமொழிகள் செம்மொழி அந்தஸ்து அளித்திருக்கிறது. பாலி, பிராகிருதம் இரண்டிற்கும் சமீபத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதாகப் படித்தது நினைவிருக்கிறது. ஆனால் உறுதிசெய்ய இயலவில்லை. (அந்த மூன்று மொழிகளையும் செம்மொழியாக அறிவித்ததும் அன்றைய ஆங்கிலேய
அரசாங்கம்). தொண்மை, மொழிவளம், இலக்கியம், வேர்சொற்கள் போன்றவற்றின் அடிப்படையில் அந்த மொழிகளுக்கு தமிழும் இணையானது என்ற கருத்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கிறேன். செம்மொழித் தகுதியால் அந்த மொழிகளுக்கு அளித்துவரும் நிதிப்பட்டியலை போன பதிவில் குறிப்பிட்டிருந்தேன். (அதுபற்றி மேலும் தகவல் பின்னே).

வாழும் மொழியான தமிழின்று அரசு சாரா நிறுவனங்களின், தனிநபர்களின் முயற்சியில் வளர்ச்சி கண்டுவருகிறது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் ,கலைச்சொல்லாக்கம் போன்ற துறைகளில் போகவேண்டிய தூரம்நிறைய இருந்தாலும், வந்திருக்கும் தூரமும் நல்லமுறையில் தான் இருக்கிறது. ஆனால் மொழியாராய்ச்சி, மொழிவளர்ச்சி,
பன்மொழிமாற்ற அகராதி, பழைய ஓலைச்சுவடிகளை, இதுவரை பதிப்பிக்கப் படாத, அல்லது மறுபதிப்பு காணாத பழைய புத்தகங்களைப் பதிப்பித்தல், அழிந்த நூற்களை மீட்டெடுக்க முயற்சித்தல், கல்வெட்டுக்கள், செப்பேட்டுகள் காப்பது போன்ற பல்வேறு பணிகள் தமிழுக்குச் செய்யப்பட வேண்டும். இவை தனிநபர்களாலும், அரசுசாரா நிறுவனங்களாலும் பெரிய முறையில் செய்ய இயலாது. இவற்றைச் செய்வதற்கு பொருளுதவி தவிர அரசுசார் செயற்பாடும் இருக்க வேண்டும்.

"சலுகைகளுக்குகாகவா" என்ற கேள்வியில் எனக்கு உடன்பாடில்லை. அரசு மக்களுக்குச் செய்வது சலுகையல்ல கடமை. செம்மொழியென்று அறிவித்ததனால் சமஸ்கிருதத்துக்கு என்ன செய்யப்படுகிறது என்று படிக்கிறோம். அதுபோல நம்மொழிக்கும், நமது வரிப்பணத்தில் செய்யவேண்டியது அரசின் பொறுப்பு. மற்ற இந்திய மாநிலங்களின் கவனிப்பிற்கு ஆளாவது, உலகளாவிய பல்கலைக்கழகங்களில் தமிழிருக்கை, தமிழ்த்துறை உருவாவதற்கான வாய்ப்பு போன்றவைகளும் செம்மொழி தகுதியோடு வரலாம் என்று கூறப்படுகிறது. இவையன்றி வேறென்ன வேண்டும். செம்மொழி ஆக்குவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு. தமிழ் செம்மொழி அல்ல என்று எந்தக் காரணமாவது காட்டி நிராகரிக்க முடிகிறதா. ஏன் செய்யவில்லை. கோடிகோடியாய் சமஸ்கிருதத்துக்கு அளிப்பது குறைந்து போய்விடும் என்றுதானே?

செம்மொழி ஏன் ஆக்கவேண்டும்? - நிதிக்கும், நிதியின் மூலம் நடத்தப்படும் ஆக்கபூர்வமான செயல்களுக்கும், தகுதியினால் ஏற்படும் கவணிப்பிற்கும். போன பதிவில் இருந்த பட்டியல் 1978க் ஆண்டிற்கானது. எழுபதுகளில் எழுதப்பட்ட ஆண்டறிக்கைகளில் அங்கங்கே சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், பழந்தமிழ் என்று
சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் வரவர வெறும் சமஸ்கிருதம் மட்டும் என்ற நிலைக்கு ஆகிவிட்டது. 2001-02 ஆண்டிற்கான மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டறிக்கையைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு கோடிகள் செலவளித்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

- "சமஸ்கிருத மேம்பாடு" என்பதன் கீழ் மட்டும் 2001-02ல் ரூ1050 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது
- "சமஸ்கிருத பயிற்சி மேம்பாட்டிற்கு நூறு சதவீத மானியம்
- வேத விற்பன்னர்களை கௌரவிப்பதற்கும், சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு உதவித்தொகை அளிப்பதற்கும் மானியம்
- வருடத்திற்கு 15 சமஸ்கிருத, 3 பாரசீக, அராபிய, தலாஒரு பாலி, பிராகிருத் அறிஞருக்கு வருடத்திற்கு ரூ50,000/- அவரது வாழ்நாள் முழுவதிற்கும்

இப்படிச் செலவிடும் நிதியை நமக்கும் வாங்கி நம்மொழியையும் செழிக்கச் செய்வது தான் அரசியல்வாதிகளின் கடமை. அதைக் கேட்டுப் போராடவேண்டுமே தவிர கேட்கிறவனை குறைசொல்ல முடியாது. திராவிட கட்சிகள் இதனைக் காட்டியே ஒட்டுகேட்டுவருகிறார்கள் என்று கூறுவதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. அன்றே
ஆக்கிவிட்டிருந்தால் ஏன் இவ்வளவு நாள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தராமல் இழுத்தடித்து ஏன் இன்னும் அதனை ஒரு பிரச்சனையாக வைத்திருக்கிறார்கள். இதுபற்றி குரல் கூடக் கொடுக்காத தேசிய காட்சிகளை, காங்கிரஸ், பிஜேபிக்காரர்களை அல்லவா நாம் திட்டிக் கேட்கவேண்டும்.

கூகிள் மூலம் தகவல் திரட்டிய சுட்டிகள்:
2001-02 மனிதவள மேம்பாட்டுத்துறை ஆண்டறிக்கை
மனிதவளமேம்பாட்டுத்துறையின் மொழிகள் பிரிவு
செம்மொழியாக்குங்கள் - வாஜ்பேயி - தமிழறிஞர்கள் சந்திப்பு
தீராநதி: தமிழ் ஏன் செம்மொழியாக்கப்பட வேண்டும் - மணைவை முஸ்தபா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, May 28, 2004

தமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்

தமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்


பத்ரியின் இன்றைய பதிவில் தமிழி செம்மொழி ஆக்கப்படலாம் என்றும் ஆனால் அதனால் என்ன பயன்விளையலாம் என்றும் கேட்டிருக்கிறார். தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்படவேண்டும் என்று உறுதியாக நான் எண்ணுகிறேன். எனது காரணங்களைக் காட்டிலும் வலையில் தேடியதில் கிடைத்ததை இங்கு இடுகிறேன்.

தீராநதியில் மணவை முஸ்தபாவின் கேள்வி பதிலிலிருந்து:
தீராநதி: தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதன் மூலம் என்ன நன்மைகள் விளையும்?

மணவை முஸ்தபா: முதலில் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்படும். இதனால், தமிழ் பண்பாடு, இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அதிகம் நடக்கும். இப்போது கல்வெட்டு, ஓலைச்சுவடி போன்றவை தொடர்பான ஆய்வுகள் சமஸ்கிருதத்தை அளவுகோலாகக் கொண்டு செய்யப்படுகின்றன. அளவுகோலைப் பொறுத்துதான் முடிவுகள் அமையமுடியும். தமிழ்நாட்டில் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களை வைத்து சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் வந்தது என்று அறிவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் செம்மொழி ஆக்கப்படும் போது தமிழ் அளவுகோலாக மாறும். இதனால், நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் உருவாகும். மேலும் இக்காலக்கட்டத்துக்கு ஏற்றபடி தமிழ்மொழியை அறிவியல் பூர்வமாக வளர்ப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகளுக்கும் நிதியுதவிகள் அதிகம் கிடைக்கும்.

மேலும்..
ஒரு மொழி செம்மொழி ஆக்கப்பட வேண்டுமென்றால் பதினோரு அம்சங்களில் அது தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்று வகைப்படுத்தியுள்ளார்கள். தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுநிலைமை, தாய்மைத் தன்மை, பண்பாடு, கலை, பட்டறிவு, பிறமொழித் தாக்கமின்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, மொழியியல் கோட்பாடுகள் இவைதான் தகுதிகள். செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மொழிகளுமே இந்த பதினோரு அம்சங்களிலும் தகுதியுடையவை என்று சொல்ல முடியாது. குறிப்பாக சமஸ்கிருதம் ஏழு அம்சங்களில்தான் பொருந்துகிறது. ஆனால் பதினொரு அம்சங்களிலும் தகுதியுடைய மொழியாக தமிழ் இருக்கிறது....அடுத்து இந்திய நடுவண் அரசின் கல்வித்துறைத் தளத்திலிருந்து எடுத்த செம்மொழிக்கு அளிக்கப்படும் சலுகைகளின் பட்டியல் (எனது மொழியாக்கம்):

1. ஒவ்வொரு வருடமும் "கேந்திரிய சன்ஸ்கிருத வித்யாபீடங்களில்" 2524 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சமஸ்கிருதத் தேர்வு எழுதுகிறார்கள் . 473 பேருக்கு உதவித் தொகை, 300 பேருக்குத் தங்கும் வசதி அளிக்கப்படுகிறது.

2. 68 புது ஆய்வுகள் வெளியிட உதவப்படுகிறது.

3. 750 தன்னார்வ அமைப்புக்களுக்கும், 15 குருகுலங்களுக்கும் 30 லட்சத்திற்குமதிகமான உதவித் தொகை வழங்கப்படுகிறது.

4. அகராதி பதிப்பிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது.

5. 6 லட்ச ரூபாய் "ஆதர்ஷ சமஸ்கிருத பாடகசாலைக்கு" வழங்கப்படுகிறது.

6. அராபிய, பாரசீக மொழிவளர்ச்சிக்கு ரூ. 6 லட்சம் அளிக்கப்படுகிறது.

7. ஆயிரத்துக்கும் அதிகமான "சமஸ்கிருத பண்டிதர்களுக்கு" மாதம் ரூ.1800 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மற்ற வசதிகளுக்காக ரூ. 19.30 லட்சம் செலவிடப்படுகிறது.

8. சமஸ்கிருத இலக்கியங்களை வளர்க்கும் வகையில் 65000 க்கும் அதிகமான சமஸ்கிருத பக்கங்கள் பல்கலைக்கழகங்களால் அச்சடிக்கப்படுகிறது.

9. சமஸ்கிருதத்தைப் பரப்பும் வகையில் "சிரவணா பூர்ணிமா" தினம் சமஸ்கிருதத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

என்கருத்து:
இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? மற்ற எல்லா மொழி பேசும் மக்களின் வரிப்பணத்தில் செய்யபடுகிறது. என்ன மொத்தத்தில் பெரிய பணமொன்றுமில்லை என்று நீங்கள் சொல்லாம். உண்மை தான். லட்சமெல்லாம் அதிகமில்லை. ஆனால் இந்தப் புள்ளிவிவரம் வெளிவந்த ஆண்டு 1978 !!. இன்று எத்தனை கோடிக்கோடியோ. இதெல்லாம் தமிழுக்கு வேண்டாமா ??

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, May 25, 2004

Agnostic == அகநாத்திகம் ??

நேற்றைக்கு இராமகியின் அஞ்சல் ஒன்றைப் படித்தேன். agnostic என்ற வார்த்தையின் தோற்றத்தினைப் பற்றியும் , அசீவகத்துடனான ஒற்றுமை பற்றியும், பெருஞ்சித்தரனாரின் ஒரு விளக்கப்பாடலையும் குறித்து எழுதியிருந்தார். மீண்டும் நா.கணேசன் இன்று புலப்புற மறுப்பர் அதைப் படிக்கையில் '98ல் தமிழிணையத்தில் "அகநாத்திகம்" என்ற வார்த்தை உபயோகத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது. அநேகமாக இந்த வார்த்தையை வேலுமுருகனிடமிருந்தோ இரமணியிடமிருந்தோ நான் உபயோகித்தேன் என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து அப்படியே அன்று அனுப்பிய அஞ்சல்... (ரீசைக்கிளி வாழ்க!!)


இணையத்தோரே,

இந்துமத சரட்டில் அடியேன் கருத்து ஈதென்று எடுத்துரைக்க சிக்கலான கருத்தொன்றும் அகப்படாத காரணத்தால் "குண்டலினி கூட்டி வளர்த்து அந்நெருப்பில் மனப்பறவையாம் ஆசைதனை உப்புடன் மிளகாய் சேர்த்து உவப்பாய் வாட்டியே மொந்தைக்கள்
மூன்று ஊத்தி மூலநாடி ஊடுபோய் காலனடி கண்டுவந்த கள்ளுண்ணிச் சித்தர் என்ற வம்படிச்சித்தரின் சில பாடல்களை இங்கே மேற்செலுத்துகை ;-) செய்கிறேன்.

ஆசிரியர் குறிப்பு:
கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சாமிரு தத்தை புசித்திருப்பது எக்காலம்

என்று புலம்பிய பத்திரகிரியார்,பட்டினத்தார் காலத்தில் கஞ்சா,கள் மொத்த வியாபரம் செய்து கொண்டிருந்தவர் என்றும் பிற்காலத்தில் பொழுது போகததால் சித்தராக மாறி பல சாதனைகள் செய்தவர் என்று சிலர் கூறிகின்றனர்.
இன்னும் சிலர் இவர் யவன,கிரேக்க கப்பல்களில் வியாபரத்திற்காக வந்து பின் பணமனைத்தையும் பரத்தையரிடம் விட்டுவிட்டு திரும்பிப் போக பணமில்லாத காரணத்தால் இங்கேயே தங்கி விட்டார் என்றும் கூறுகின்றனர். "இவர் சித்தருமல்ல, புத்தருமல்ல
சரியான எத்தர். வள்ளி திருமண நாடகக் கொட்டகைகளில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தவர்.. ரொம்ப நாள் நாடகப்பாட்டு கேட்டதனால் உணர்ச்சி வசப்பட்டு எடைக்குப் போட்ட பழைய பரீட்சைப் பேப்பர்களில் கிறுக்கியவையே இவர் பாடல்கள்" என்போருமுண்டு. இவர் யாரென்ற கருத்தை உங்களிடமே விட்டுவிடுகிறேன் ;-).இந்து என்பது மதமல்ல...
======================

அழகிய காண்டாமிருகம் பருத்ததோர் நீர்யானை
இளகிய இடியாப்பம் பாயா தொன்னையில்
ஒழுகிய பாயாசம் அழுகிய அன்னாசிப்பழம் இதனில் ஒன்றையென்னி
இலகனேசன் இந்துவை மதமல்ல என்றெடுத்துரைத் திருப்பார்.

பாரதத்தில் பிறந்துவிட்டால் பாரதியென்றினி அழைக்கலாம்
சோரமில்லை - பறையனென்று அழைத்ததெல்லாம் பழையனவே;
யாரதனை எதிர்ப்பதுவோ? வாரும் முன்னே.
தேரதனை ஒட்டியும்மை காலிலிடறி விட்டிடுவோம்.

வம்புஏன் நமக்கென்று வாளாவே நானிருந்தேன்
தெம்புகொஞ்சம் வந்ததால் தெளிவாய் நானுரைப்பேன்.
கொம்புகொம்பு என்றதும் கொக்கியை அவிழ்க்கிறீர்
கொம்பென்று ரைத்தது காண்டாமிருகத்தின் கொம்பல்லோ.

நாலுநாலு நாலென்றதும் வேதமென்று உரைக்கிறீர்;
நாலுநாலு நாலென்பது வேதமில்லை மூடர்காள்,
நாலுநாலு நாலென்பது நல்ல காண்டாமிருகத்தின்
காலுநாலு தானென்று கருத்திலே கொள்ளுவீர்.

நட்டகல்லில் இருப்பதையும், வெட்டவெளியில் இருப்பதையும்
எட்டுக்கட்டம் நடுவிலே திட்டம்போட்டு நிற்பதையும்
விட்டம்விரைத்த வாறேநானும் வெகுநாளாய் வினவியும்
கிட்டவில்லை யாதொன்றும் கடுகளவே யாயினும்.

ஆலமுண்ட கண்டனார் அம்பலத்தில் ஆடினால்
சோளமுண்ட சொ.கருப்பனுக்கு(*) இருப்பு ஏதும்கூடுமோ.
காலமுண்ட கருத்துக்களை கல்லறையில் போட்டுவிட்டு
பேரகண்ட பெருவெளியை பெருக்கி சுத்தம் செய்யடா.

இறைவன் இருப்பதும் இல்லாதிருப்பதும் இப்புவிவாழ்வில்
உரைப்பேன்யான்- ஏற்படுத்ததாதே எள்ளளவு மாற்றமும்
இறந்தாலும் இருந்தாலும் ஆயிரம்பொன் கணக்கு
பொருந்தாதோ மதம்கொண்ட யானைக்கு மட்டும்
வதம் செய்வீர் அகநாத்திகத்தின் ஒளிகொண்டே.

- கள்ளுண்ணிச் சித்தர் (அல்லது) வம்படிச் சித்தர்.

* - சொக்கன் மகன் கருப்பன் :-)

ஆக 24 1998, 4:40 மாலை EST
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, May 19, 2004

நினைவும் இருப்பும்

நினைவும் இருப்பும்

கயிற்றையும் அரவையும் குழப்பித் தெளியலாம்
தெளிந்தபின் ஐயுறலாம்.

மனமிளகி கண்பெருகி கசிந்துருகலாம்
தலைவிரித்து முலைதிருகி எரித்தொழிக்கலாம்

தளையறுத்துக் களையகற்றிக் காற்றைத் தளுவலாம்
பற்றிக்கெட்டியிறுகி மண்ணில் பரவலாம்

வாழ்விற்குக் கடுகையும்
கடுகிற்குச் சாவற்ற வீட்டையும் தேடலாம்
அலைந்து களைத்ததும் மரத்தடியில்
புன்முறுவலிக்கலாம்

கட்டியங்கூறலாம்
பழிதுடைக்கலாம்
பழிதூற்றலாம்
போற்றிப்பணியலாம்
தூற்றியெரியலாம்
கூட்டிவளர்க்கலாம்
முட்டிச்சிதறலாம்
.
.
காலை மாற்றிப்போட்டு,
கையை தலைக்கு மேலே தூக்கி
பெரிதாயொரு கொட்டாவி விடலாம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.