enathu paarvai

Meyyappan valai pathivukal.

Wednesday, March 24, 2004

ஒருபோகம்

வாளத்துல தழமண்டி பச்சையைடிச்சிருக்கோ
ஊரியாவை நிறையப் போட்டிருப்பான்போல
ஓடையில வேப்பநெழலு விழுந்த இடமெல்லாம்
பாலுபிடிக்காது.. எப்பவும் சோடைதான்
ஐய்யனார் கம்மாய் நெறஞ்சதுன்னா
பெரியகாடியை அறுத்து முடியாது
சின்னக்காடி கிணத்துத் தண்ணியைக்
குடிச்சாவது மேல வந்துரும்ல
நாத்தங்காலுல விட்டதும் நல்ல
உசரம் வந்துருக்கோ
.
.
வயலைவித்து வெகுநாளாச்சுன்னாலும்
வெளச்சல் நல்லாருக்கனும்ல

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, March 10, 2004

subliminalableticable saam(i)a"rat"s

subliminalableticable saam(i)a"rat"s

ஊடகத்தின் மொழி எப்படியெல்லாம் மாறுகிறது, மாற்றப்படுகிறது, செய்தியைக் கட்டமைக்கிறது என்பது நாம் தினமும் பார்ப்பது தான். இந்தியாவை ஒளிரவைக்கும் பாஜகாவின், செப்11த் தொடர்ந்து மக்களை நன்னெறிவழிநடத்தும் சீரியதலைமையுடையோனாகத் தன் பணத்தில் தன்னை விளம்பரப்படுத்தும் புஷ்சின் சார்புடைய அரசியல் விளம்பரங்கள் தவிர நடுநிலைமையெனப் பறைசாற்றும் ஊடகங்களின் செயல்பாடும் நிறைய இப்படி இருக்கிறது. ஈழச்செய்திகளை நாளும் திரிக்கும் நம்மூர் ஊடகங்களையும், நாட்டுப்பற்றைக் மானாவரியாக கொட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க பேருடகங்களையும் பற்றிப் பார்த்து, கேட்டுப் படித்துக்கொண்டிருக்கையில் இன்று படித்ததைப் பற்றி ஒரு பதிவு.

நமது எம்ஜியார், முரசொலி போன்ற கட்சியிதழ்களில் வெளிப்படையாகத் தங்களது சார்புநிலையை அறிவித்து அதனடிப்படையில் வெளிப்படும் எழுத்தைவிட, வெளியே தெரியாமல் பூடகமாகவும், நாசூக்காகவும் ஊடகங்கள் தங்களுக்கேற்றவாறு மாற்றியளிக்கும் எழுத்து ஒவ்வொரு முறை படிக்கையிலும் கோபமேற்படுத்துகிறது. போன 2000 தேர்தலில், குடியரசுக்கட்சியின் ஒரு விளம்பரத்தில், democrats பொய்யை அவிழ்த்து விடுகிறார்கள் என்று சொல்லுகையில் திரையில் rats என்ற வார்த்தை பெரிதாக ஒரு நொடிநேரம் வந்து போனது குறித்து கண்டனங்கள் வந்ததும் அதற்கு புஷ் பதிலளித்ததும் நினைவிருக்கலாம்.

ஜூனியர் விகடனில் இரண்டு சாமியார்களைப் பற்றிய கட்டுரை. இந்த இரண்டுபேராலும் தமிழ்நாட்டுக்கு இதுவரையில் ஒரு சின்ன நண்மையாவது விளைந்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. இருவரைப் பற்றியும் எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. இந்த கட்டுரையில் இருந்த ஒரு வரி தான் என்னை எழுதத் தூண்டியது. அந்த வரி:

"சங்கராச்சாரியார்கள் குளத்தின் வடகிழக்கு மூலையில் உட்கார்ந்து பூஜை புனஸ்காரங்கள் செய்து புனித நீராட, மதுரை ஆதினமோ சங்கராச்சாரியாரின் எதிர்புறமாக நின்றபடி கும்பேஸ்வரன் இருக்கும் திசை நோக்கி கைகூப்பி நீராடினார்."

குளிப்பது முழங்கால் அளவிருந்த லட்சம்பேர் குளித்து முடித்திருந்த அழுக்கு நீர். இதில் ஒருவர் மட்டும் புனித நீராடுகிறார். இன்னொரு சாமியார் வெறும் நீராடுகிறார். இந்த இரு சாமியார்களிடையே ஒருவருக்கு மட்டும் இருக்கும் அந்தப் புனிதம் என்ன? நாசூக்காய் வெளிப்படும் மொழியில் ஒரு புனிதம், ஒரு பீடம் கட்டமைக்கப்படுகிறது. படிப்பவர் அடிமனத்தில் இது படிந்தபின் தினமும் அவர் புனித நீராடி, புனித உணவருந்தி, புனித ஏப்பம் விடுகிறார்.

பி.கு
ஒரு உப்புச்சப்பில்லாத சாதாரண விசயத்தில் ஜூவியில் வரும் எழுத்துக்கே எனக்குக் கோபம் வருகிறதென்றால், வாழ்க்கையை, வரலாறைப் திசைதிருப்பும் முக்கியச் செய்திகளைத் திரித்து ஹிந்து & கோ வெளியிடுவதைப் படிக்கையில் எழும் நண்பர்களின் கோபத்தை, அதன் அளவை நிலையில் பொருத்திப் பார்க்க முடிகிறது.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.