enathu paarvai

Meyyappan valai pathivukal.

Friday, April 23, 2004

ஜமேய்கா: வாழ்வும் கடனும்

ஜமேய்கா: வாழ்வும் கடனும்

நேற்றுப் பார்த்த விவரணப் படம்: Life & Debt. பார்த்ததும் எனக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்திய இந்த விவரணப்படம் ஜமேய்காவின் இன்றைய பொருளாதார நிலையைப் பற்றியது. அறுபதுகளில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றவுடன், கனவுகளுடன் ஆரம்பித்த இந்தச் சிறு தீவின் பயணம் எப்படி IMF, அமெரிக்க தலையீடுகளால் இன்று நிலைகுலைந்து நிற்கிறது என்பதை இருகோணங்களில் காண்பிக்கிறது.

ஒரு இழை: ஜமேய்காவின் வடக்குக் கடற்கரைநகரான "மாண்டிகோ பே"க்கு வரும் அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் காண்பது. வெதுவெதுப்பான படிகம் போல் மின்னும் aquagreen கரீபியன் கடல், நிலவொளியைப் பொடி செய்து தூவியது போன்ற அழகான, மிருதுவான கடற்கரை மணல், பளீரிடும் சூரியன், மாலையானதும் ஒலிக்கும் ரெக்கே, பகலிரவு எப்பொழுதும் திறந்திருக்கும் பார், ஆப்பிள்டன் ரம், பார்க்கும் திசையெங்கும் பரந்து விரிந்திருக்கும் Tropical காடுகள். உலகின் உயர்தர காப்பி பயிரிடப்படும் புளூமவுண்டன் பகுதி. விடுமுறையைச் செலவழிக்க உங்களுக்காகவே உருவான சொர்க்க பூமி.

அடுத்த இழை: தொலைக்காட்சியில் வாசிக்கப்படும் செய்திமூலம் தெரியவரும் கிங்ஸ்டனில் வேலைஇல்லாதவர்கள் நடத்தும் மறியல். துப்பாக்கிசூடு, கலவரம். இழுத்து மூடப்பட்ட பல தொழிற்சாலைகள். கவணிப்பாரற்றுக் கிடக்கும் பல விளைச்சல் நிலங்கள். ரோட்டோ ரங்களில் சலனமின்று அமர்ந்திருக்கும் முதியவர்கள், விளிம்பு நிலை மக்கள், மருத்துவமனையில்லாத, பள்ளிக்கூடங்கள் இல்லாத, ஆனால் பர்கர் கிங்கும், பிட்சா ஹட்டும், மெக்டோ னல்ட்சும் இருக்கும் பழுதடைந்த சாலைகள். வாரம் வெறும் 30 டாலர் ஊதியம் தரும் வேலையையும் இழந்து போராடும் பெண்கள்.

ஒரு IMF அதிகாரி, ஜமேய்காவின் முன்னாள் பிரதமர் மைக்கேல் மான்லி, ஜமேய்கா பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் ஆகிய மூவருடனான பேட்டி மூலம் ஜமேய்காவின் கடன், பொருளாதாரம், இறக்குமதி பற்றிய விவரங்கள் தரப்படுகிறது. இதனிடையில் ஒரு பால் பண்ணையின் உரிமையாளர், வாழைத்தோட்டம் வைத்திருப்பவர், விவசாயிகள், மாட்டுக் கறி பதனிடும் தொழிற்சாலையில் வேலிசெய்பவர்கள் இவர்களின் கருத்துகள். மையாமியில் இருந்து கப்பல், கப்பலாக இறங்கும் பால்மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மாமிசம். அமெரிக்க உபரிப் பொருள்கள், அமெரிக்க மானியத்தில் மலிவான விலையில் நிறைக்கப்படும் இந்தப் பொருட்கள் ஜமேய்காவின் பொருளாதரத்தை நசுக்குவது விவரிக்கப்படுகிறது. உதாரணம் பால் உற்பத்தி.

முற்றிலும் சிதிலமடைந்த ஒரு பண்ணை ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான பசுமாடுகளால் நிறைந்திருந்தது. IMFல் கடன் வாங்குவதற்கான முன்விதிகளின் அடிப்படையில் சந்தைத் திறந்து விடப்பட்டதும், அமெரிக்கா தனது உபரி பால்மாவுப்பைகளை மிகக் குறைந்த விலையில் ஜாமாய்காவில் தள்ளுகிறது. இதனால் பண்ணையில் உற்பத்தி செய்யும் பால் வாங்க ஆள் இல்லாமல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நிலத்தில் கொட்டப்படுகிறது. நாளடைவில் தாக்குப் பிடிக்க முடியாத அந்தப் பண்ணை மூடப்பட்டு அதைச் சார்ந்திருக்கும் பலர் தெருவிற்கு வருகிறார்கள். ஜமேய்காவின் பால்சந்தையே கறந்த பாலைவிட்டு, மாவுப் பாலுக்கு மாற்றப்படுகிறது. இப்பொழுது மலிவாக விற்கப்படும் இந்த பால்மாவு, அமெரிக்கா தனது பால் உற்பத்தியாளர்களுக்கு மானியத்தை நிறுத்துகையில் எக்கச்சக்க விலைக்கு விற்கப்படும். ஆனால், அந்த நிலையில் ஜமேய்காவில் பால்பண்ணைத் தொழில் முற்றிலும் அழிந்திருக்கும். இதே நிலைதான் வெங்காயம், உருளைக்கிழங்கு, மாமிசம் எல்லாவற்றிற்கும்.

ஒரு முறை கப்பலில் ஜமேய்காவிற்கு அனுப்பபட்ட கோழிகறி 20 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. உண்மை தெரிந்ததும், அதை அனுப்பிய நிறுவனம் அது ஜமேய்காவிற்கு அனுப்பப்பட்டது அல்ல, என்றும் ஹெய்திக்கு அனுப்பபட்டது என்று தெரிவிக்கிறது). ஏழு பில்லியன் கடனில் இருக்கும் ஜமேய்கா எப்படி இன்னும் கடனில் மூழ்குகிறது என்பதனைக் காட்டுகிறது இந்த விவரணப்படம்.

இதைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட குற்றவுணர்ச்சி எதனாலென்றால், சென்ற கோடையில் அங்கு விடுமுறைக்குச் சென்ற நாங்கள், அங்கு எல்லாமே அதிக விலையில் இருப்பதாக நினைத்து, ஏன் இப்படி கொள்ளை விலை விற்கிறார்கள் என்று நினைத்ததானால். அமெரிக்காவிலே எல்லாம் இதைவிட எல்லாம் மலிவாக இருக்குமே என்று நினைத்ததனால். விடுமுறையை உல்லாசமாகாக் கழிக்க சொர்க்கம் போன்ற இடத்திற்குச் செல்லும் வாய்ப்பும் வசதியும் எனக்கு இருப்பதையும், அதே இடத்தில் நாளும் உழன்று வெளியேற வழியின்றி தவிக்கும் மக்களின் இடர்மிகுந்த வாழ்க்கையை அது காட்டுவதனால். அதைப் போன்ற சிறிய பல நாடுகளின் உழைப்பில், அவற்றின் கலைந்த கனவில் தான் நான் இங்கு அனுபவிக்கும் அமைதியான, வசதிகள் மிகுந்த வாழ்க்கை சாத்தியமாகிறது என்பதனை அது கூறுகிறது என்பதனால்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, April 16, 2004

ராதுகா, முன்னேற்றம், மிர் : திருவாளர். எம்மின் ஸ்டெப்பிப் ?

ராதுகா, முன்னேற்றம், மிர் : திருவாளர். எம்மின் ஸ்டெப்பிப் பயண அனுபவங்கள்.

ஆப்செட்டில் அச்சான கண்ணுக்கு இதமான எழுத்துரு, தடிமனான அட்டையின் மேல் இருக்கும் பளபளப்பான உறை, பக்கங்களுக்கு நடுவே மின்னும் ஊதா நிறத்தில் பட்டுநூலிலான பக்கக்குறி, மலிவுலும் மலிவான விலை. ஒவ்வொரு புத்தகமாக நினைவில் வந்து போகிறது.

சிறிது நாட்களுக்கு முன் படித்த பிரபுவின் மடலில் யா.பெரல்மனின் "பொழுதுபோக்கு பௌதீக"த்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்துக்கொண்டிருந்ததை எழுத அந்த மடல் தூண்டிவிட்டது. ராதுகா என்ற ஒலியைக் கேட்டதுமே, இவ்வளவு நாள் மறந்திருந்த அந்த மிகப் பரிச்சயமான வாசனை என் புலனை நிறைத்தது. ஒவ்வொரு முறை புத்தகத்தை நுகரும் போதும் அதன் பிரம்மாண்டத்தையும், பரந்து விரிந்த ஸ்டெப்பிப் புல்வெளியையும், சைபீரியப் பனியையும், அமைதியாய் நகரும் தோனையும் வொல்காவையும், கூட்டுப் பண்ணையில் சிந்தப்படும் வேர்வையையும், சமோவார் தேநீரையும் ருஷ்யாவே எனக்காக, நான் சுவாசிப்பதற்காக அனுப்பிவைத்திருப்பதாய் நினைப்பேன்.

ஆரம்பத்தில் நான் படித்தது வீட்டில் கிடந்த "ருஷ்யச் சிறுகதைகள்" என்ற நூலில் இருந்து "மேல்கோட்டு". அதுதான் நான் முதன்முதலில் மீண்டும் மீண்டும் படித்த சிறுகதை. நிகோலய் கோகலின் அந்தச்சிறுகதை எழுப்பிய சோகத்தையும் மிஞ்சிவிடக்கூடியது அதே தொகுப்பின் இருந்த "மூமூ" என்ற இவான் துர்கேனிவின் சிறுகதை. அந்த நூலைப் படிக்கையில் ருஷ்யா, மொழிபெயர்ப்பு, உலகச் சிறுகதை இதெல்லாம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ராணிமுத்து நாவலைப் படிப்பது போல் இன்னொரு புத்தகம். அப்படித்தான் படித்தேன். அதற்கு சிலஆண்டுகளுக்குப் பின் நூலக உறுப்பினராகும் தகுதி வந்ததும் அங்கு காணக் கிடைத்த ருஷ்ய புத்தகங்கள் எனக்களித்த வாசிப்பு அனுபவத்திற்கும், மகிழ்ச்சிக்கும் ஈடு வேறேதும் இல்லை. எவ்வளவு புத்தகங்கள்.

அவற்றை மீண்டும் நினைத்துப் பார்ப்பதே ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. ஞாபகமிருப்பதில் சிலவற்றைப் பற்றிக் குறித்து வைக்க நினைக்கிறேன். ருஷ்ய தமிழ் மொழியாக்க நூலகளைக் குறித்து பரிச்சயமில்லாதவர்களுக்கு பல்லை உடைக்கு பெயர்கள் நிறைந்த ஒரு பட்டியலாக இருக்கும். ஆனால், பரிச்சயமுள்ளவர்களுக்கு நண்பன் எழுதிய மிகப்பழைய கடிதத்தை படிப்பதைப் போன்ற நினைவுகூறலாக இருக்கலாம்.

முதலில் நினைவில் இருப்பவை அவ்வளவாக பிரபலமில்லாத ருஷ்ய எழுத்தாளார்களின் படைப்புகள்.

சிங்கிஸ் ஐத்மாத்தவின் "அன்னை வயல்", "குல்சாரி"ம். ஒரு குதிரையின் பார்வையில் தன்வரலாறாக எழுதப்பட்டிருந்தது. குல்சாரி தன் ஆண்மை பறிக்கப்பட்ட நிகழ்வை விவரிக்கும் வரிகளில் நான் உணர்ந்த பரிதவிப்பு, பயமும் நினைவில் இருக்கிறது.

"வீரம் விளைந்தது" என்றொரு நாவல். எழுதியவரின் பெயர் மறந்துவிட்டது. பல இன்னல்களுக்கிடையே, இயற்கையின் ஒத்துழைப்பில்லாதவொரு இடத்தில் ஒரு கூட்டுப்பண்ணையின் போராட்டத்தையும் வெற்றியையும் வெளிப்படுத்திய நாவல். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வெட்டிய கிணறில் தண்ணீர் வருவதை சித்தரிக்கும் பக்கங்களை நான் சிவகங்கையிலிருந்து மதகுபட்டிக்கு பேருந்தில் சென்ற பொழுது படித்தேன். அதைப் படித்து அகவமைதி சிதறி, நிமிர்கையில், ஒக்கூருக்கு அருகே இருக்கும் மாசாத்தியாரின் நிநநவுத்தூண் கண்ணில் பட்டது. தொலைதூர நிலமான ருஷ்யா, பழங்காலப் புலவரான மாசாத்தியார், மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் நான்.. இடம், காலம் எல்லாம் உருகி ஒன்றாவதாக நான் நினைத்து அந்தக் கணத்தில் அடைந்த உள்ளக் கிளர்ச்சியை மறக்கமுடியாதது.

விளாதிமீர் பகமோலவின் "இவான்" சதுப்புநிலக் காடுகளின் மரங்களுக்கிடையில், இடுப்பளவு நீரில் நாஜிகளின் பார்வையில் படாமல் பதுங்கி பதுங்கி ரஷ்ய ராணுவத்திற்குச் செய்தி எடுத்துச் சென்ற போது அருகில் சீரிப் பாய்ந்த தோட்டாவும், தூக்கமில்லா இரவுகளிலும், பகலிலும் அவனது இமைகளை அழுத்திப் படரும் கனவும் மெலிதாகத் தெரிகிறது.

"அதிகாலையின் அமைதியில்" என்றொரு நாவல். எழுதியவர் பெயர் தெரியவில்லை. இதுவும் போரைப் பற்றியது. ஏழு பேர் அடங்கிய ஒரு சிறு குழு எப்படி ஒரு பெரிய ஜெர்மானிய இராணுப்பிரிவை எதிர்கொள்கிறது என்பதனைப் பற்றியது.

மிக்கயீல் ஷோலகவின் "கன்னி நிலம்" (Virgin soil upturned) அப்பொழுதுதான் நூலகத்திற்கு வந்திருந்தது. பளீரென்ற வெள்ளை நிறத்தாள். பக்கங்களை அப்படியே திருப்பினால் கை அழுக்குத்தெரியுமே என்று, கைகளைக் கழுவித் துடைத்துவிட்டுத்தான் படிக்கவே ஆரம்பித்தேன். இரண்டு தொகுதிகளையும் படித்து முடித்ததும் ஒரு பெரும் வரலாறையே அருகில் இருந்து அறிந்தது போல இருந்தது.

தஸ்தேய்வ்ஸ்கி, தல்ஸ்தோய், செகாவ், துர்கேனிவ், புஷ்கின், கார்க்கி போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்பை அதற்கப்புறம் படித்தேன், அதற்கப்புறம் அ-புனைவு நூல்களையும்.. எந்தப் புத்தகத்திலெல்லாம் ராதுகா, மிர், முன்னேற்றப் பதிப்பகம் என்று பெயர் தெரிகிறதோ அதையெல்லா.. நேருவைப் பற்றிய தடியான புத்தகமொன்று, தலைப்பு நினைவில் இல்லை. அப்படிப் படித்தது தான் யா.பெரல்மனின் "பொழுதுபோக்கு பௌதிகம்". அதைப் பற்றியும், மற்ற நூல்களைப் பற்றியும், மொழியாக்கம் செய்த நா.தர்மராஜன், பூ.சோமசுந்தரம் பற்றியும் அடுத்த முறை எழுத வேண்டும்.

இரண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்கெல்லாம் அற்புதமான பதிப்புகள் கிடைக்கும். நான் முதலில் காசுகொடுத்து புத்தகம் வாங்கி ஆரம்பிக்கையில் வாங்கியது எல்லாம் ருஷ்ய புத்தகங்கள் தான். ராதுகா, மிர் , முன்னேற்றப் பதிப்பகங்களின் புத்தகங்கள் எத்தனை சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு ஒருபுதிய உலகை, வாழ்க்கையை, அனுபங்களை அறிமுகப்படுத்தி இருக்கும். தொலைக்காட்சியில்லா, இணையமில்லா, கேபிளில்லா எனது மாணவப் பருவத்தில் என்னை வரவேற்று பல விநோத விந்தை உலகங்களுக்குக் கைபிடித்து அழைத்துச் சென்று மகிழ்வளித்த அந்த ருஷ்ய பதிப்பகங்களுக்கு எனது நன்றியை எப்படி வெளிப்படுத்த முடியும்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, April 08, 2004

சில தவறுகளும், அதைப் பதிவதும்

"உலகத்தமிழ்" மின்னிதழில் காலச்சுவடு கண்ணனின் பத்தியான "சிதறல்கள்" படித்தேன். எழுதியிருந்த மூன்று விஷயங்களில் இரண்டு தவறான தகவலுடன் இருந்தது. (மூன்றாவது வாட்டர்கேட் ஊழல் பற்றியது. அதுபற்றி எனக்கு விரிவாகத் தெரியாது).

முதலாவது: "஑ஜனாதிபதியின் வகுப்பறைக்குச் சென்றோம். ஜனாதிபதி ஜான் கென்னடியால் 1968ல் உருவாக்கப்பட்டது". 1968ல் ஜான் கென்னடி மறைந்து 5 வருடங்கள் ஆகியிருக்கும். எப்படி உருவாக்கினார் என்று தெரியவில்லை. உறுதி செய்து கொள்ளத் தேடியதில் Presidential Classroom பக்கத்தில் கென்னடி உதிர்த்த எண்ணங்களின் வழியில், உட்ரோ வில்சன், லிண்டன் ஜான்சன் வழியில் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். காமராஜர் பேரை நம்ம ஊரு காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் எடுத்துச்சொல்வதைப் போலத்தான்...

இரண்டாவது: "இறந்த கணவர் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றார். அவரது மனைவி தற்பொழுது மிசௌரி கவர்னராகப் பணியாற்றி வருகிறார்" என்பதில் இரண்டு பிழைகள். மெல் கார்னகான் போட்டியிட்டது 2000ல் செனட்டர் பதவிக்கு, கவர்னர் பதவிக்கு அல்ல. தேர்தலுக்கு முன்பே ஒரு விமான விபத்தில் மெல்கார்னகான் உயிரிழந்தார். மிசௌரி மாநில சட்டத்தின்படி வாக்குச்சீட்டை திருத்த இயலவில்லை. இறந்தவர் வெற்றி பெற்றால், கவர்னர் வேறொருவரை நியமிக்கமுடியும் (இடைக்காலத்திற்கு மட்டும்). அதன்படி அவரது மனைவி ஜீன் கார்னகான் செனட்டராக பதவியேற்றார். மீண்டும் 2002 ல் நடந்த இடைக்காலத் தேர்தலில், அவர் குடியரசுக்கட்சி வேட்பாளரான ஜேம்ஸ் டாலண்டிடம் தோல்வியுற்றார். (நவ. 2000 தேர்தலில் இறந்தவரிடம் தோல்வியுற்றவர் தற்பொழுது எல்லோரையும் சட்டத்தைக் காட்டி மிரட்டி அடாவடித்தனம் பண்ணும் ஜான் ஆஷ்கிராப்ட்).

என்று நான் எழுதிவிட்டேன். இப்பொழுது இதை வலைப்பதியுமுன் கொஞ்சம் யோசனை. மீண்டும் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டும் பதிவு. இதைப் பதிந்து என்ன ஆகப்போகிறது. அதே ஒரு நல்ல விஷயத்தைப் பற்றி எழுத உத்வேகம் இல்லை. சுந்தரவடிவேல் குறிப்பிட்டிருந்தபடி பின்னூட்டங்களை எழுதுவதிலும் இல்லை. ஏன் எங்காவது ஒரு பிழையைப் பார்த்தால் உடனே எழுதத் தோன்றுகிறது ? நம்மை எல்லாம் தெரிந்த ஆளாகக் காட்டிக்கொள்ள வாய்ப்பு, அல்லது ஒரு பிரபலமானவரை மட்டம் தட்டுதல் மூலம் என்னை முக்கியமானவனாகக் காட்டிக் கொள்ள வாய்ப்பு என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், நிச்சயம் தவறைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும், அப்பொழுது தான் கட்டுரையாளர்களுக்குத் தங்கள் தகவல்களைக் கொஞ்சமாவது சரிபார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது தோன்றும். கண்ணனுக்கும் இதை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். (செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து எப்பொழுதும் எனக்குக் கேள்விகள் இருக்கிறது. நான் பள்ளிக் காலங்களில், தினமும் காலையில் வீட்டையடுத்து இருந்த முடிதிருத்தகத்தில் தினத்தந்தி படிப்பேன். ஒவ்வொரு முறை சிவகங்கையைச் சார்ந்த செய்தி வரும்போதும், அது பாதி தப்பும் தவறுமாக இருக்கும். பேர்கள் மாற்றப்பட்டிருக்கும், தகவல் பொய்யாக இருக்கும். எனக்குத் தெரிந்தது சிவகங்கைச் செய்தி மட்டும் தான். மற்ற ஊர்காரர்கள் அவர்கள் ஊர் சம்பந்தப்பட்ட செய்தியைப் படித்தபோது என்ன நினைத்திருப்பார்களோ. )
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, April 02, 2004

தமிழகத்தில் தற்கொலைகள்

இன்று பிபிஸி யில் படித்த ஒரு செய்தி பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். உலகிலேயே தென்னிந்தியாவில் தான் தற்கொலை விகிதம் அதிக அளவில் இருக்கிறது என்பது எனக்கு எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு செய்தி. அந்தக் கட்டுரையின் கடைசி பத்தியில், "பெரிதும் விவசாயம் சார்ந்திருந்த சமூகம், தொழிற்சார்ந்த சமூகமாக மாறும்காலகட்டத்தில் அது தீவிரமான பிரச்சினையை (தலைமுறை இடைவெளி, பால் வேறுபாட்டு) எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது." என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு கட்டுப்பாடான விவசாய சமூகம் மாறிவரும் சூழலை எதிர்கொள்ளுகிறதனால் வரும் விளைவுகள் என்பதனைத் தமிழகத்திற்குப் பொருத்திப் பார்க்க முடியுமென்றாலும் இன்னும் சில காரணிகளும் நினைவில் தோன்றுகிறது. 10-19 வயதினர் பெரும்பாலும் இரு காரணங்களால் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர். ஒன்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமை. துனைக்கண்டத்தைத் தவிர வேறெங்கிலும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஒரு நிகழ்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்குமா என்று தெரியவில்லை. நடுத்தட்டு குடும்பங்களில் தேர்வு என்பது எப்பொழுதும் கழுத்தை நெரித்தபடியே தான் இருக்கிறது. குழந்தைகள் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்பும், சுமைகளும் இளைஞர்களை எக்கணத்திலும் ஒடித்து விடக்கூடியதாய் இருக்கிறது.

தேர்வில் தோல்வி என்பது ஒரு இருபது ஆண்டுகளாகத்தான் திறமையுடனும், மானத்துடனும் (!) சம்பந்தப்படுத்தப் படுகிறது என்று நினைக்கிறேன். இதற்கும், நர்சரி, மெற்றிகுலேஷன் கலாச்சாரத்திற்கும் எதுவும் தொடர்பிருக்குமா என்பது யோசித்துப் பார்க்க வேண்டிய கேள்வி. தேர்வில் தோல்வி என்பதையும் விட மதிப்பெண்னும், மதிப்பெண் சார்ந்த அதீத எதிர்பார்ப்பும் தற்கொலைக்குத் தள்ளுவதாய் இருக்கிறது.

இன்னொரு காரணி காதல் தோல்வி. காதல் சார்ந்த அதீதமான புனிதங்களே, அந்தப் புனிதத்தை அடைய முடியாத நிலையில் அதைத் தோல்வியாகச் சித்தரிக்க வைக்கிகிறது என்று நினைக்கிறேன். தவிர சாதி, பொருளாதார நிலை வேறுபாடுகளும் காதலில் இன்னும் பங்காற்றுகின்றன. மேலைக்கலாச்சாரத்தில் காதல் தோல்வி என்பது தற்கொலையைத் தூண்டும் ஒரு நிகழ்வாக இல்லை.

பதின்வயது தற்கொலைகளுக்கு இவை காரணங்களாக இருந்தாலும் பெரும்பாலும் வறுமையும், கந்துவட்டிக் கொடுமைகளுமே பல குடும்பங்களைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது. நெசவாளர்களும், விவசாயிகளும் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளுவது ஒரு "செய்தி" என்ற அளவில் ஆகிவிட்டதற்கும், அதைச் செய்தியாக ஏற்றுக்கொண்டு அதைப் படித்துவிட்டு அடுத்த செய்திக்குச் செல்ல என் மனமும் தயாராக இருப்பதற்கும் என்ன காரணம் ?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.